×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டிட அனுமதி கோரும் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்: ஆணையர் உத்தரவு

சென்னை : கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது  30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  கட்டிட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் உருவாக்கப்பட்டது. இந்த விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், இதை முறையாக அமல்படுத்தவில்லை.  இந்நிலையில், சென்னையில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  சிஎம்டிஏ உத்தரவிட்டது. மேலும் மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை பிரித்து அளித்து நகர் ஊரமைப்பு இயக்கம் உத்தரவிட்டது. இதன்அடிப்படையில் சென்னையில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல செயற்பொறியாளர்களுக்கு அதி காரம் வழங்கி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார். இதன்படி, 30 அடி உயரம், 5,000 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு, மண்டல செயற்பொறியாளர்கள் ஒப்புதல் வழங்கலாம். விண்ணப்பங்கள் மீது, இவர்களே முடிவுகள் எடுக்கலாம் என்று உத்தரவிட்டப்பட்டது.

40 அடி உயரம், 5,000 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, வட்டார மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் ஒப்புதல் வழங்கலாம். மேலும், 40 அடி உயரம், 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு, ஒப்புதல் வழங்குவதில், முதன்மை தலைமை பொறியாளர் முடிவுகள் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 8 மணி நேரத்திற்குள் மண்டல உதவி செயற்பொறியாளர்கள் வரைபடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.  இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் விண்ணப்பத்தை 21 நாட்களுக்குள் மண்டல செயற்பொறியாளருக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோன்று கட்டிடத்தை இடிப்பது தொடர்பான விண்ணப்பத்தையும் 21 நாட்களுக்குள் மண்டல செயற்பொறியாளருக்கு அனுப்ப வேண்டும். கட்டிட அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக வட்டார கண்காணிப்பு பொறியாளர் மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இந்த ஆய்வு கூட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் எந்த விண்ணப்பங்களும் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்து பணிகள் துறை மூலம் முதன்மை தலைமை பொறியாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Chennai Municipalities , Chennai Corporation, the application, the Commissioner ordered
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...