×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட 3,056 கனஅடி நீரில் 300 கனஅடி மட்டுமே பூண்டி வந்தடைந்தது: தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை : ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட3,056 கனஅடி நீரில் 300 கனஅடி மட்டுமே பூண்டி வந்தடைந்துள்ளது தமிழக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து அம்மாநில அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். இதில், முதல் தவணை காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் தர வேண்டும். இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணைகாலம் தொடங்கிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையில் உள்ள தண்ணீர் இருப்பை காரணம் காட்டி ஆந்திர அரசு தண்ணீர் திறக்காமல் காலம் கடத்தி வந்தது.

இதனால், சென்னையில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் திணறிய தமிழக அரசு உடனடியாக இரண்டு அமைச்சர்களை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது. இந்த தவணை காலத்தில் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், ஆந்திர அரசு 3 டிஎம்சி வரை தரும் என்று தமிழக அதிகாரிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கடந்த 31ம் தேதியுடன் முதல் தவணை காலம் முடிவடைந்தது. எனவே கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சோமசீலா அணை நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் கண்டலேறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணை நீர் மட்டம் 39.32 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 இதன் காரணமாக தற்போது வரை கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 3,056 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு வெறும் 300 கன அடியாக குறைந்தது. இதனால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆந்திர அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். ‘பாசனத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளதால் குறைந்திருக்கும். ஓரிரு நாளில் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி அவர்கள் சமாளித்துள்ளனர்.
பாசனத்துக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திருட்டு படுஜோராக நடப்பதால் தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், கண்டலேறு அணையில் எவ்வளவு தண்ணீரை திறந்தாலும் பூண்டி ஏரிக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர் ஒரு காலமும் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் ஆந்திர விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் சென்னை மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவு குறைந்துவிடுகிறது.இதன் காரணமாகவே கோடை காலங்களில் கடும் குடிநீர் பஞ்சத்தை சென்னை மக்கள் சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, தமிழக அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அம்மாநில அரசு, விவசாயிகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தண்ணீர் திருட்டை தடுக்க முடியாமல் தமிழக அதிகாரிகள் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Kandaleran Dam ,Kandaleratu Dam , Officials of the Kandalur dam, Tamil Nadu and Tamil Nadu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...