×

கொருக்குப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு: குடியிருப்புவாசிகள் கோரிக்கை மனு

தண்டையார்பேட்டை, : கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 லட்சம் சதுரடி இடம் உள்ளது. இதனை பல ஆண்டுகளுக்கு முன், சுண்ணாம்பு தொழிற்சாலை நடத்துவதற்கு குத்தகை அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது.  ஆனால், காலப்போக்கில் வாடகை எதுவும் செலுத்தாமல், அப்பகுதி மக்கள் மேற்கண்ட இடத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் அந்த இடத்தை காலி செய்யவில்லை.  இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கு குடியிருப்பவர்கள் கால அவகாசம் கேட்டதன் பேரில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த இடத்தை நேற்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார். அப்போது அங்கு உள்ளவர்கள் மாற்று இடம் வழங்க கோரி அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.   அதைத்தொடர்ந்து கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள பாதிரியார் ஒருவர் கிறிஸ்தவர்களுக்கு இடுகாடு அமைத்து தரவேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Tags : land ,Municipal Commissioner ,Residents ,area ,Korukkupettai ,Korukuppattu , Inspection of Korukkupettai, Occupation, Land and Municipal Commissioner
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...