×

ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தீவிர சோதனை கணக்கில் வராத 32 லட்சம் பறிமுதல்: 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று 2ம் நாளாக  சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ₹31.83 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி மெயின்ரோடு பகுதியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மூலம் தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இங்கிருந்து நெசவாளர்களுக்கு கூலி வழங்குவது, துணி தயாரிக்க தேவையான நூல்களை கொள்முதல் செய்வது போன்ற பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றி வரும் அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் இருந்து மானியம் வழங்குவதற்காக 3 சதவீத தொகையை லஞ்சமாக பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த அலுவலகம் மட்டுமின்றி அசோகபுரம் அய்யன்காடு பகுதியில் உள்ள ஈரோடு கூட்டுறவு கைத்தறி வளர்ச்சி திட்ட அலுவலகத்திலும், சூளையில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்திலும் தனிக்குழுவாக சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் தரன் சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்காக சென்று விட்டார். இரவு 8 மணிக்கு பிறகு பெண் ஊழியர்களை மட்டும் அனுப்பி வைத்தனர். மற்ற ஊழியர்களிடம் விடிய, விடிய விசாரணை நடந்தது. இதைத்தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அலுவலகத்திற்கு பணிக்கு வந்த அலுவலர்களிடம் உரிய அடையாள அட்டை உள்ளதா? என சோதனை செய்த பிறகே பணிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனை நேற்று மதியம் 1.30 மணி வரை நடந்தது. 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் ₹28 லட்சத்து 51 ஆயிரத்து 480 ரூபாயும், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் ₹3 லட்சத்து 31 ஆயிரத்து 890 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர். பறிமுதல் செய்த பணம் என கணக்கில் வராத பணம் என்று தெரியவந்துள்ளது. அதன்பின், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இதுதொடர்பாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் தரன், துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் பழனிகுமார், கைத்தறி அலுவலர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன அலுவலக மேலாளர் ஜோதி (எ) ஜோதிலிங்கம், அசோகபுரம் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் கணக்காளராக பணியாற்றிய செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் சிக்கியது எப்படி?
தமிழக அரசின் சார்பில் கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் பெட்சீட், வேட்டி, சேலை, துண்டு ரகங்கள், ஜமக்காளம் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மானியம் உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலமாக அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு நெசவாளர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 249 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு அரசு பல கோடி ரூபாயை தள்ளுபடி மானியமாக அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தள்ளுபடி மானியத்தை வழங்க 3 சதவீத தொகையை லஞ்சமாக வழங்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரூபாயை நெசவாளர்கள் லஞ்சமாக கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி உள்ளனர்.

Tags : office ,Assistant Director ,rape ,Linen Assistant Director , Erode Linen,Director's Office,second ,rape
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்