×

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் 32 நாட்களுக்கு பின்பு ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் 32 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்தது. இந்நிலையில், நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று காலை, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்ததால் பரிசல் ஓட்டிகளின் நலன் கருதி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) அழகிரிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வுக்கு பின்பு ஒகேனக்கல் கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பரிசலில் சென்று வர அனுமதி அளித்தனர். கடந்த 32 நாட்களாக இருந்த தடை விலக்கப்பட்டதால், பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுற்றுலா வந்த ஏராளமானோர் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8,000 கன அடியாக குறைந்துள்ளது. அதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 10,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,500 கன அடியாக சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பும் நேற்று காலை 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சி.

Tags : low water , Kaveri, prize, Oakenakkal
× RELATED கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை..!!