×

சென்னை அருகே பரபரப்பு சம்பவம் கல்லூரி மாணவன் சுட்டுக்கொலை: நண்பருக்கு வலைவீச்சு

சென்னை : சென்னை அருகே துப்பாக்கியால் சுட்டு மாணவன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகே வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் வேங்கடமங்கலம் உள்ளது. இங்குள்ள பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஷோபனா (45). இவரது கணவர் கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு முகேஷ்குமார் (19), லோகேஷ்குமார் (15) ஆகிய இரு மகன்கள். இவர்களில் லோகேஷ்குமார் கீரப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.ஷோபனா வேங்கடமங்கலம் அருகே தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். வறுமையான சூழலிலும் தனது மூத்த மகன் முகேஷை அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் சேர்த்து ஷோபனா படிக்க வைத்துள்ளார். இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்த முகேஷ்குமார் தேர்வு வருவதால் அதற்கு படிக்க விடுமுறை விடப்பட்டதால் கடந்த இரு நாட்களாக வீட்டிலேயே இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் ஷோபனா வேலைக்கு சென்று விட்டார். 11 மணியளவில் பக்கத்து தெருவில் வசித்து வந்த தனது நண்பர் விஜய் வீட்டிற்கு செல்வதாக தனது அத்தையிடம் கூறிவிட்டு முகேஷ் சென்றார்.     வேங்கடமங்கலம் கிராமத்தில் பார்கவி நகர் பகுதியில் அமைந்துள்ள விஜய் வீட்டிற்கு சென்ற முகேஷ், தனியறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். வீட்டின் சமையலறையில் விஜயின் அண்ணி பவானி சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டிற்கு வெளியே வராண்டாவில் விஜய்யின் தம்பி உதய் அமர்ந்திருந்தார். நேற்று பகல் 11.30 மணியளவில் விஜய் மற்றும் முகேஷ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த அறையில் இருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது அண்ணி பவானி மற்றும் தம்பி உதயா ஆகியோர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது முகேஷின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த விஜய் அவசர அவசரமாக துப்பாக்கியை ஒரு துணிப்பையில் சுற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். திடீரென நடந்த இந்த

சம்பவத்தால் நிலைகுலைந்த பவானி மற்றும் அவரது மைத்துனர் உதயா ஆகியோர் வெளியே வந்து கூச்சல் போட்டனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முகேஷை மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், தகவலறிந்து முகேஷின் தாயார் ஷோபனா மற்றும் உறவினர்களும் கிராம மக்களும் மருத்துவமனைக்கு வந்து முற்றுகையிட்டனர்.    இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த முகேஷ் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார்.     இச்சம்பவம் குறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் எஸ்.பி. கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் எஸ்.பி. சுந்தரவதனம், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர். தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜய்யை தேடி வருகின்றனர்.

மேலும், விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் தனியார் உணவு சப்ளை (சுமோட்டோ) நிறுவனத்தில் வேலை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அங்கு ஏதேனும் வடமாநில நபர்களிடம் தொடர்பு ஏற்பட்டதா, அவர்கள் மூலமாக துப்பாக்கி வாங்கி வந்தாரா என்று விசாரிக்கின்றனர். மாணவர் முகேஷ் எந்த காரணத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும் வீடியோ கேம் ஆடும் விவகாரத்தில்தான் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதிமுக பிரமுகரின் உறவினர்
துப்பாக்கியால் சுட்ட விஜய் அதிமுகவைச் சேர்ந்த வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவியின் நெருங்கிய உறவினர் மகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவியை கொல்ல அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து ரவி தனது பாதுகாப்புக்காக ரகசியமாக துப்பாக்கி வாங்கினாரா, அந்த துப்பாக்கியை விஜய் பயன்படுத்தினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேஞ்சர் ஷார்க் கேம் காரணமா?
புளூவேல் என்ற செல்போன் வீடியோ கேம்,  பப்ஜி  கேம் போல, ‘டேஞ்சர் ஷார்க்’’ எனப்படும் செல்போன் வீடியோ கேமை ஆபத்தானது. இருவரும் எப்போதும் விளையாடிக் கொண்டு இருப்பதை குடும்பத்தினர் கவனித்து எச்சரித்துள்ளனர். இந்த விளையாட்டில் கொலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதாகவும், ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வெறியால் துப்பாக்கியால் சுட்டால் என்ன நடக்கும் என்பது தெரியாமல், இந்த கொலையை அவன்செய்திருக்கக் கூடும் என்ற ரீதியில் இரு குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளத்துப்பாக்கியா?
கொல்லப்பட்ட முகேஷ் மற்றும் கொலை செய்த விஜய் இருவரும் ஒரே வயதுடையவர்கள். இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்துள்ளனர். நேற்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் எங்கேயோ சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இதனால், கள்ளத்துப்பாக்கி எங்கேயாவது கிடைத்து அதை சினிமா பாணியில் சுடுவதற்கு பயிற்சி செய்ததில் தவறாக வெடித்து முகேஷ் இறந்திருக்கலாமோ என்ற மற்றொரு கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : College student ,student ,Chennai Chennai College ,incident ,Sense , Sense , incident,Chennai ,shot dead
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...