×

சென்னையில் திடீர் காற்றுமாசு அதிகரிப்பு: அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை: டெல்லியில் காற்று மாசு பாதிப்பால் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பின் மீதமுள்ள பயிர்களின் அடிப்பகுதி, வேரை மறுமுறை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தின்போது, காற்று மாசு ஏற்படுகிறது. இப்படி எரிப்பதை தவிர்க்கும்படி பஞ்சாப், அரியானா மாநில அரசுகளை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனாலும் அறுவடைக்குபின், காய்ந்த பயிர்களின் அடிப்பகுதியை எரிப்பது தொடர்ந்து வருகின்றன. இதனால் நவம்பர் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், காற்றுமாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப், அரியானா தலைமை செயலாளர்கள், டிஜிபிக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் காற்றுமாசு அதிகரித்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அத்துடன் டெல்லி அளவிற்கு இல்லாவிட்டாலும் முழுக்க முழுக்க நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால்தான் இந்த காற்று மாசு ஏற்படுகிறது. காலையில் நிலவும் பனிப்பொழிவுக்கும் காற்று மாசுக்கும் சம்பந்தமில்லை. இதனால் சென்னையில் இனி வரும் நாட்களிலும் காற்று மாசு அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்துவது மக்களின் கையில்தான் உள்ளது என்று அவர் அந்த முகநூல் பதிவில் கூறியுள்ளார்.அதேபோல், சில இணையதள பக்கங்களையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த இணையதள பக்கத்தில் டெல்லியில் இருந்து மாசடைந்த காற்று சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை பகுதிக்கு பயணிக்கிறது. அவரின் முகநூல் பக்கத்தை பின்பற்றுவோர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் நிலவும் காற்று மாசால் ஏற்பட்ட புகை படலம் தெரிவதை புகைப்படமாக எடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காற்று மாசின் அளவு 500 என்ற எண் மூலம் மதிப்பிடப்படுகிறது. காற்று மாசு 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான காற்று 0-50, சுவாசிக்க தகுந்த காற்று 50-100, ஓரளவு மாசுபட்ட காற்று 100-200, மாசுபட்ட காற்று 200-300, மோசமான காற்று 300- 400, அபாய அளவு 400-500  என வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை நிலவரப்படி காற்று மாசு 289 முதல் 173 வரை உள்ளது. அதே நேரத்தில் சென்னையில் 150க்குகீழ் என்ற நிலையில் இருந்த காற்று மாசின் அளவு அதிகரித்து, தற்போது சென்னையில் அதிகபட்சமாக 201 முதல் 168 வரை உள்ளது. சென்னையின் வழக்கமான காற்றுமாசின் அளவு 0-150 என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரை 53,94,413 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தால் டெல்லியை போன்று சென்னையிலும் முகமூடி அணிய வேண்டிய நிலை ஏற்படலாம்.

Tags : Chennai ,public , air pollution , Chennai,public in fear
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...