×

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிவு: பதவிக்காக அதிமுகவில் போட்டி

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயமாக உள்ளது. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களில், மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிக்க போட்டா போட்டி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில், விழுப்புரத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, ஜனவரி 8ம் தேதி) தமிழகத்தின் 33வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது. அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 5 மாவட்டங்களும் தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியாளர்களுக்கு கொடுத்துள்ள நெருக்கடி காரணமாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், புதிய மாவட்டங்களை அறிவித்ததுபோன்று, இந்த மாவட்டங்களுக்கு ஏற்ப அதிமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் அதிமுகவில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களை 52 மாவட்டங்களாக பிரித்து, தனித்தனி மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தற்போது கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களையும், அதிமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கையுடன் இணைத்து இந்த 5 புதிய மாவட்டங்களுக்கும் தனித்தனி மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக தென்காசி மாவட்டம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தன்னை தென்காசி மாவட்ட அதிமுக செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதே நேரம், சங்கரன்கோவில் எம்எல்ஏவும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன் அய்யப்பராஜுக்கு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வேகமாக செயல்படக் கூடியவர் என்பதால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு என்று கூறப்படுகிறது.இதேபோன்று, மற்ற 4 மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அந்த பகுதி எம்பி, எம்எல்ஏக்கள் சிபாரிசுடன் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதுபற்றி, இன்று சென்னையில் நடைபெறும் அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கூட்டம்
அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் இன்று (6ம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு மற்றும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.அண்மையில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதே வேகத்தில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Tags : districts ,Tamil Nadu ,District Secretaries: Competition ,Udayam ,AIADMK , districts , Tamil Nadu,District Secretaries, AIADMK
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...