×

காவல் துறை குறித்து அவதூறு கருத்து மீராவை கைது செய்ய போலீஸ் திட்டம்

சென்னை: சென்னை சேத்துப்பட்டு முருகேசன் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(எ)மீரா மிதுன்(32). கடந்த 2016ம் அண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி போட்டி மற்றும் 2018ல் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் பெற்றார். அதன் பிறகு  எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு மீராமிதுன் தனியாக ‘மிஸ் தமிழ்நாடு தீவா’ என்ற பெயரில் அழகி போட்டி நடத்தும் அமைப்பை தொடங்கினார். இதற்கிடையே அழகி போட்டியில் கலந்து கொள்ள இளம் பெண்களிடம் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

அதேபோல் தங்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக பாதிக்கப்பட்ட நபர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி எழும்பூர் போலீசார் மே 26ம் தேதி மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அழகி போட்டி நடத்த காவல் துறை பல வகையில் தடுத்ததாக கூறி காவல் துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒருமையில் கடுமையாக பேசியுள்ளார். இதுகுறித்து நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் தட்டி கேட்டபோது, அவரையும் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து ஓட்டல் ஊழியர் அருண்(22) காவல் துறை பற்றி அவதூறாக பேசியதை தட்டு கேட்ட என்னை கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 294(பி), 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகை மீரா மிதுன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Meera ,Defamatory , Defamatory, police, Police plan , Meera
× RELATED அன்புமணி மீதான அவதூறு வழக்கை அரசு திரும்பபெற்றது