×

ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் 50% கட்டண சலுகை: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயிலில் இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு, நாள் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து வருகிறது. மற்ற போக்குவரத்துச் சேவையை விட அதிவிரைவு போக்குவரத்துச்சேவையாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அதிவிரைவு சேவையாக மெட்ரோ ரயில் சேவை பார்க்கப்பட்டாலும் அதிக கட்டண வசூலால் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த முடியாத சேவையாக இருந்து வருகிறது. இதனால், கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்தவாறு உள்ளது.

அதன்படி, கடந்த மாதம் தீபாவளி பண்டிகையான 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் வகையில் 50 சதவீத கட்டண சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினர். எனவே, கட்டண குறைப்பை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீத கட்டண தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஆனால், இந்த கட்டண சலுகையானது ட்ரிப் பாஸ் உள்ளவர்கள் மற்றும் பயண சலுகை அட்டை கொண்டவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.Tags : train ,state holidays , On Sunday, state, holidays,Metro Rail
× RELATED நிவர் புயல் நிவாரண மீட்புப்...