×

தீர்ப்பு தேதி நெருங்குவதையொட்டி அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ஊடுருவல் : உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் அங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் உத்தரப் பிரேசத்திற்குள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அயோத்தி உள்ளிட்ட மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீர்ப்பு தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அயோத்தியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதற்காக பாகிஸ் தானை சேர்ந்த 7 தீவிரவாதிகள் உபி.யில் ஊடுருவியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் கோரக்பூர், அயோத்தி ஆகிய மாவட்டங்களில் பதுங்கியுள்ளனர். இவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் முகமது யாகூப், அபுஹம்சா, முகமது ஷாபாஸ், நிஷார் அகமது, முகமது கவுமி சவுத்ரி என தெரியவந்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக போலீசாருக்கு 10ம் தேதி முதல் ‘லீவ்’ இல்லை

தமிழக டிஜிபி திரிபாதி நேற்று முன்தினம் தமிழக காவல் துறையில் உள்ள சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, சிபிசிஐடி, ரயில்வே, பொருளாதார குற்றப்பிரிவு என அனைத்து பிரிவுகளில் பணியாற்றும் ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், டிஐஜிக்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில், “மறு உத்தரவு வரும் வரை 10ம் தேதி முதல் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் யாருக்கும் விடுப்பு கொடுக்க கூடாது. எந்த நேரத்திலும் அனைத்து பிரிவு போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனைத்து காவலர்களையும் திரட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை உள்ளாட்சி தேர்தலுக்காக என்று கூறப்பட்டாலும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் இறுதி தீர்ப்பு வரும் 13ம் தேதி அன்று பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தன்று மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Terrorists ,Ayodhya ,Militants , Penetration of militants, Ayodhya,intelligence alert
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...