×

புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட குழப்பம்

* பட்நவிஸ் தலைமையில் அமைச்சரவை பதவியேற்கும் என பா.ஜ. அறிவிப்பு
* தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம்

மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜ அறிவித்துள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாஜ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மீண்டும் கூறியுள்ள சிவசேனா, இன்னொருபுறம் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்கவும் முயற்சி செய்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தொடர்பாக உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. பாஜ-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்றாலும், இரு கட்சிகளுக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்துகிறது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க பாஜ தொடர்ந்து மறுத்து வருகிறது. சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி உட்பட 16 அமைச்சர் பதவிகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாக நேற்று முன்தினம் பாஜ சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு இதுவரை சிவசேனா தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அதேவேளை, தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேக்கு நம்பிக்கைக்குரியவரான சஞ்சய் ராவுத் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் போன்ற தலைவர்களும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கவும் அந்த அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் தயாராக உள்ளனர். சமீபத்தில் இரண்டு நாட்கள் தனது கட்சித் தலைவர்களுடனும், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுடனும் தீவிர ஆலோசனை நடத்திய சரத் பவார், நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைப்பது தொடர்பாக சோனியாவுடன் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிராவில் பாஜவுக்கு மாற்றாக சிவசேனாவுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் சரத் பவார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதற்கு சோனியா தரப்பில் உறுதியான பதில் ஏதும் அளிக்கப்படவில்லை. சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சியமைய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவளிக்க தயாராக உள்ள போதிலும், சிவசேனா தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தால் காங்கிரசின் மதச்சார்பற்ற கொள்கை குறித்து நாடு முழுவதும் கேள்வி எழும் என சோனியா காந்தி யோசிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மும்பை திரும்பியுள்ள சரத் பவார் மீண்டும் தனது கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லி சென்று சோனியாவை சந்தித்து பேசவிருக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகே காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்பது உறுதியாக தெரியவரும்.
இதற்கிடையே, பெரும்பான்மை பலம் இல்லாததால் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்போவதில்லை என்று நேற்று காலையில் பாஜ வட்டாரங்கள் கூறி வந்த நிலையில், நேற்று மாலை திடீர் திருப்பமாக தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் விரைவில் புதிய அரசு பதவியேற்கும் என்று மகாராஷ்டிரா பாஜ தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா பாஜவின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பேட்டியளித்த சந்திரகாந்த் பாட்டீல், ‘‘பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் மீண்டும் பாஜ கூட்டணி அரசு பதவியேற்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார். சந்திரகாந்த் பாட்டீல் இவ்வாறு கூறியுள்ள நிலையில், நேற்று மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவுத், ‘‘முதல்வர் பதவி குறித்து பேசுவதாக இருந்தால் மட்டுமே பாஜவுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தும். இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என பாஜ எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்படி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சிவசேனா அடுத்த கட்டத்துக்கு நகரும். தற்போதைய குழப்பமான அரசியல் சூழ்நிலைக்கு நிச்சயமாக சிவசேனா காரணமில்லை. பாஜ என்ன வாக்குறுதி அளித்ததோ அதன்படி அக்கட்சி நடந்து கொள்ள வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக  இருக்கிறோம்’’ என்றார். இவ்வாறு பாஜ தலைவர்களும் சிவசேனாவினரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருவதால் மகாராஷ்டிரா அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்து எந்த கட்சியின் தலைமையில் ஆட்சியமையும் என்பது தொடர்பாக உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது.

‘எந்த நேரத்திலும் நல்ல செய்தி வரும்’

ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜ-சிவசேனா இடையேயான சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதியமைச்சருமான சுதிர் முங்காந்திவர் கூறினார். பாஜ உயர்நிலைக்குழு கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த சுதிர் முங்காந்திவர், ‘‘புதிய அரசு பதவியேற்பது தொடர்பான நல்ல செய்தி எந்தநேரத்திலும் வரும். தேவேந்திர பட்நவிஸ்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு எங்களது முழு ஆதரவு உள்ளது’’ என்றார்.

‘பாஜ.வுடன் கூட்டணியை முறித்தால் மட்டுமே சிவசேனாவுக்கு ஆதரவு’

பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் மட்டுமே சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவளிப்பது பற்றி தேசியவாத காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் மும்பைத் தலைவர் நவாப் மாலிக் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சிவசேனா முதலில் பாஜவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும். மத்தியில் அமைச்சராக இருக்கும் சிவசேனாவை சேர்ந்த அர்விந்த் சாவந்த் உடனடியாக பதவி விலக வேண்டும். சிவசேனா அப்படி செய்தால் மட்டுமே மகாராஷ்டிராவில் மாற்று வழியில் புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகளை தேசியவாத காங்கிரஸ் செய்யும். சிவசேனாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், தேர்தலுக்கு முன்பு வேறு கட்சிகளில் இருந்து பாஜவுக்கு சென்றவர்கள் மீண்டும் தாய்க்கட்சிகளுக்கு திரும்ப தயாராக இருக்கிறார்கள். 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் இப்போது தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்றார்.

Tags : government ,Maharashtra , perpetual chaos, Maharashtra, new government continues , take office
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...