×

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக நிலக்கல்லில் 5 ஏக்கர் நிலம் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வலியுறுத்தல்

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு  செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு அறிவித்தபடி நிலக்கல்லில்  5 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில்  தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வலியுறுத்தினார். பிரசித்தி பெற்ற  சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல  கால பூஜைகளில் பங்கேற்க தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி  உள்பட தென் மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு  செல்வர். தென் மாநில பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள்  குறித்து ஒவ்வொரு ஆண்டும் மண்டல கால பூஜைக்கான நடை திறப்பதற்கு முன்பு தென்  மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை  கூட்டம் திருவனந்தபுரத்தில் நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு  ஆலோசனை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. காலை 11 மணிக்கு கேரள  முதல்வர் பினராயி விஜயன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கேரள தேவசம் போர்டு  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை வகித்தார். தமிழக அறநிலையத்துறை  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர்  வேலம்பள்ளி நிவாசராவ், புதுச்சேரி மாநில விவசாயத்துறை அமைச்சர்  கமலக்கண்ணன், தமிழக அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர்  பனீந்திரரெட்டி, இணை ஆணையர் அன்புமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசுகையில், சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென்மாநிலங்களில் இருந்து தான் அதிகளவில்  பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு  வருகிறது.

இந்த வருடமும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்.  பக்தர்களுக்கு உதவும் வகையில், அந்தந்த மாநில தலைநகரங்களில் தகவல் உதவி  மையங்கள் திறக்கப்பட வேண்டும் என கடந்த வருடமே கேரளா வலியுறுத்தியது. சபரிமலையில்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே  சபரிமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட எந்த  பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு வர வேண்டாம். இருமுடி கட்டில் கூட பிளாஸ்டிக்  பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார். தமிழக அறநிலையத்துறை  அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில், தமிழகத்தில் இருந்து ஏராளமான  பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக களியக்காவிளை,  செங்கோட்டை, குமுளி, பாலக்காடு உள்பட தமிழக கேரள எல்லைகளில் தகவல் உதவி  மையங்கள் திறக்கப்படும்.

சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திலும்  பக்தர்களின் உதவிக்காக தகவல் உதவி மையம் திறக்கப்படும். 2016ல் நடந்த  ஆலோசனை கூட்டத்தில் நிலக்கல்லில் 5 ஏக்கர் நிலம் தருவதாக கேரள அரசு  கூறியிருந்தது. இதற்கு பதிலாக பழனியில் கேரள பக்தர்களுக்காக நிலத்தை ஒதுக்க  தமிழக அரசு  ஏற்கனவே சம்மதித்துள்ளது. அதற்கான குறிப்பிட்ட இடமும் தேர்வு  செய்யப்பட்டு விட்டது. எனவே நிலக்கல்லில் நிலத்தை ஒதுக்கும் நடவடிக்கையை  கேரள அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : land ,pilgrims ,coal pilgrims ,Sabarimala , 5 acres of land, coal pilgrims visiting Sabarimala
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!