×

பிஎப் பணம் 2,600 கோடி முறைகேடு மின்துறை மாஜி அதிகாரியை கைது செய்தது உபி போலீஸ் : அகிலேசுக்கு நெருக்கமானவர்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில மின்வாரிய தொழிலாளர்களின் பிஎப் பணம் 2,600 கோடியை முறைகேடு செய்தது தொடர்பாக, மின்சார உற்பத்தி நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ.பி.மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் , சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டு வந்தது. அதே அளவுக்கான தொகையை அந்நிறுவனமும் பிஎப் கணக்கில் செலுத்த வேண்டும். ஆனால், ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்திய பணத்தை வீட்டு வசதி நிதி நிறுவனமான டிஎச்எப்எல்.லில் கடந்த 2017ம் ஆண்டு முதல் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம், 2,600 கோடி ஊழல் நடந்திருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி, அதுவரை மாநில அரசின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். தீவிர விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மின்சார உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் பிரவீன் குமார் குப்தா, நிதிப்பிரிவு இயக்குநர் சுதான்சு திவேதி ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ.பி.மிஸ்ராவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மிக நெருக்கமானவர் என கூறப்படுகிறது. உபி.யில் யோகி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2017, மார்ச் 24ம் தேதி ஏ.பி.மிஸ்ராவை நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது.

பதவியை விட்டு செல்லும் போது, தனது அலுவலக அறையிலிருந்து பல்வேறு முக்கிய கோப்புகளை ஏ.பி.மிஸ்ரா எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அகிலேஷ் ஆட்சிக் காலத்தில் 3 முறை மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட மிஸ்ரா சீட் கேட்டு முயற்சித்துள்ளார். கடந்த ஆட்சியில் இவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. மிஸ்ரா கைது குறித்து முதல்வர் யோகி அலுவலகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஊழலுக்கு எதிராக யோகி அரசு சிறிதும் சமரசம் செய்து கொள்ளாது. அகிலேஷுக்கு நெருக்கமான அதிகாரி தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட உள்ளார்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘யோகி பதவி விலக வேண்டும்’

ஏ.பி. மிஸ்ரா கைது செய்யப்பட்ட நிலையில், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சமாஜ்வாடி ஆட்சியில், மின் உற்பத்தி நிறுவன தொழிலாளர்களின் பிஎப் பணம் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படவில்லை. இது எப்போது நடந்தது என எப்ஐஆரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். ஊழலுக்கு காரணமான மின்வாரிய அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவை பதவி விலகச் சொல்லும் தைரியம் கூட இல்லாத பலவீனமான முதல்வராக யோகி இருக்கிறார். பயப்படும் இந்த அரசு உண்மையை மறைக்கிறது. பாஜ கட்சிக்குள்ளே மோதல் நடக்கிறது. 300 எம்எல்ஏ.க்களுக்கு யோகியை பிடிக்கவில்லை,’’ என குற்றம்சாட்டினார்.

Tags : UP ,UB Police , UB Police arrested, PF money, Rs 2,600 crore
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...