×

பாஜ ஆட்சியில் அனைத்து துறைகளும் வீழ்ச்சி பொருளாதார பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது

* காங்கிரஸ் தேசிய ஊடகத் துறை செயலாளர் பேட்டி


சென்னை: பாஜ ஆட்சியில் அனைத்து துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பொருளாதார பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் தேசிய ஊடகத் துறை செயலாளர் சுப்ரியா ஸ்ரீநேட் கூறினார்.  அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை செயலாளர் சுப்ரியா ஸ்ரீநேட் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சி ஊசலாடுவதால், வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்பது கோமா நிலைக்கு போய்விட்டது. மூழ்கும் பொருளாதாரம், சுருங்கிவிட்ட சேமிப்புகள், முடங்கிப்போன தொழில் வர்த்தகம், வங்கி முறைகேடுகள் ஆகியவை பாஜ ஆட்சியில் பொருளாதாரத்தின் அவலநிலையை பிரதிபலிக்கிறது. இந்திய பொருளாதாரம், அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு என்ற பெயரில் சீனா உள்ளிட்ட 15 நாடுகளுடன் தாராள வர்த்தக உடன்பாட்டில் பிரதமர் மோடி இந்த மாதம் கையெழுத்திட போகிறார். இதன்மூலம் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் சந்தையாக இந்தியா மாறிவிடும்.  

கடந்த 6 மாதங்களாக இந்த ஆட்சியின் தவறான கொள்கை காரணமாக பொருளாதார பேரழிவை நோக்கி நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. இதை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, வக்கீல் செல்வம், லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : BJP ,India , India is heading, towards the economic catastrophe , fall,all sectors ,BJP
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு