×

கொடைக்கானல் ஏரியில் படகுகள் இயக்கத் தடை : போட் கிளப்புக்கு சீல் வைக்கவும் உத்தரவு

மதுரை: கொடைக்கானல் ஏரியில் படகுகள் இயக்க தடை விதித்த ஐகோர்ட் கிளை, போட் கிளப்புக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொடைக்கானல் ஏரி கடந்த 2009ல் நகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. ஏரியை ஒட்டியுள்ள 8 சென்ட் நிலம் போட் கிளப்பிற்கு குத்தகை அடிப்படையில் வருவாய் துறையால் ஒதுக்கப்பட்டது. குத்தகை காலம் செப். 1ம் தேதியுடன் முடிந்தது. கிளப் சார்பில் வணிக ரீதியாக படகுகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கோ, நகராட்சிக்கோ பணம் செலுத்துவதே கிடையாது. எனவே ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வணிக ரீதியாக யாரும் படகுகள் இயக்கக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நகராட்சி வக்கீல் முகம்மது முகைதீன் ஆஜராகி, ‘‘போட்கிளப்பிற்கான குத்தகை காலம் நீட்டிக்கப் படவில்லை. வணிக ரீதியான படகுகள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி இல்லை’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘போட் கிளப்பிற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். அங்குள்ள கவுன்டர்களை மூட வேண்டும். போட்களின் எண்ணிக்கை அதிகமாக கூறப்படுகிறது. எனவே, ஏரியில் படகுகள் இயக்கக் கூடாது’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 25க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Kodaikanal Lake ,boat club , boats operating ,n Kodaikanal Lake, Order to seal boat club
× RELATED கலங்கரை விளக்கம் – போட் கிளப் வரை 2வது...