×

முன்னாள் மாணவர்கள், நிறுவன நிதியை பெற புதிய இணைய தளம் உருவாக்கம் : முதல்வர் துவங்கி வைத்தார்

சென்னை: அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், தனியார் ெதாழில் நிறுவனங்களிடம் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு தேவையான நிதியுதவிகளை பெறுவதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் புதிய இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய இணைய தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் படித்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கின்றனர். அதேபோல தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கின்றன. ஆனால், இதற்கான நிதியை எப்படி பள்ளிகளுக்கு கொடுப்பது என்ற தெளிவான வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்காக ஒரு புதிய இணைய தளத்தை பள்ளிக் கல்வித்துறை தற்போது உருவாக்கியுள்ளது.

தனியார் தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு உதவி செய்யும் வகையில் எளிமையான, நம்பகமான இணைய தளமோ அல்லது வேறு வழித்தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. முன்னாள் மாணவர்களுக்கும் இதுபோன்ற வழித்தடங்கள் இல்லாமல் போனதால் அவர்கள் பள்ளிகளுக்கு செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. அரசுப் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக உதவும் தனிநபர்,  நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல் தொகுப்புகளையும் பெற முடியவில்லை. இந்த குறைகளை களையும் வகையில் இணைய தளம் மூலம் நிதி திரட்டும் முகமை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இந்த இணைய முகமை நம்பகத்தன்மை வாய்ந்தது. வெளிப்படைத்தன்மை கொண்டது. இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் நிதி அதற்காக தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படும். அந்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த நிதிக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாக செயல்படும்.
இந்நிலையில் இந்த புதிய இணைய தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.


Tags : alumni ,CM , new web site ,alumni, company funding, CM started
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!