×

கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் போலீசார் திடீர் ஸ்டிரைக்: 11 மணி நேரம் முடங்கியது தலைநகரம்

புதுடெல்லி: கோர்ட் வளாகத்தில் போலீசை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை கோரி, டெல்லி போலீசார் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் இரவில் முடிவுக்கு வந்தது. 72 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று போலீஸ் தலைமையகம் முன்பாக போலீசார் ேபாராட்டம் நடத்தியது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமையன்று பார்க்கிங் தகராறு காரணமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து வன்முறையில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீசார், 8 வக்கீல்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது.

 சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் வக்கீல்களை தாக்கியது தொடர்பாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளையும், 2 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. இது டெல்லி போலீசார் அனைவர் மனதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வக்கீல்களுக்கு பதிலடியாக, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டெல்லி போலீசார் நேற்று போலீஸ் தலைமையகம் முன்பாக சாலையில் திரண்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர். நேற்று காலையில்
அவர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது “பாதுகாவலர்களை பாதுகாத்திடுங்கள்”என எழுதப்பட்டு இருந்த பதாகைகளை ஏந்தி நீதி கேட்டு கோஷம் எழுப்பினர். போலீசார் போராட்டம் தொடங்கிய தகவல் அறிந்ததும் பணிக்கு சென்று கொண்டு இருந்த மற்ற போலீசாரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களும் டெல்லி போலீஸ் தலைமையகம் நோக்கி வந்தனர். அங்கு பெரும் கூட்டமாக திரண்ட போலீசார் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

போலீசாரின் திடீர் ஸ்டிரைக்கால் டெல்லி முற்றிலும் நேற்று முடங்கியது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக்கூட நேற்று யாரும் இல்லை. போராட்டம் நடத்திய போலீசாரை நேரில் சந்தித்த டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக், “நாம் ஒழுக்கத்துடன் கூடிய ஒரு படை பிரிவு என்பதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, இணை கமிஷனர் ராஜேஷ் குரானா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும்போது,’போராட்டம் நடத்தும் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. போலீசாரை தாக்கிய வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார். இந்த வாக்குறுதியையும் போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

 டெல்லி போலீசாரின் குடும்பத்தினர் இந்தியா கேட் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. போராட்டத்தில் பங்ேகற்ற போலீசாரின் ஒருபகுதியினரும் ஊர்வலமாக இந்தியா கேட் பகுதிக்கு சென்றனர். இதனால் ஐடிஓ, அக்‌ஷர்தாம், லட்சுமி நகர் பகுதி முழுவதும் முடங்கியது. இதை தொடர்ந்து கவர்னர் அனில் பைஜால் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் தலைமை செயலாளர் விஜயகுமார் தேவ் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் பிரவீர் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டதாக டெல்லி தென்கிழக்கு இணை கமிஷனர் தேவேஷ் வத்சவா போலீசார் முன்னிலையில் அறிவித்தார். இரவாகிவிட்டதால் போலீசார் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரம் நடந்த போராட்டத்தை போலீசார் வாபஸ் பெற்றனர். இதனால் டெல்லியில் நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

உண்மை அறிக்கை தாக்கல்
தீஸ்  ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே  ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீசார்  நேற்று அறிக்கை ஒன்றை சமர்பித்தனர். அதில், இந்த தாக்குதல் சம்பவத்தில்  குறைந்தது 20 போலீசார் மற்றும் பல வழக்கறிஞர்கள் காயமடைந்துளளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது ஒரு  உண்மை அறிக்கையாகும். சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலை  மற்றும் அதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை டெல்லி  காவல்துறை வழங்கியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags : strike ,Delhi ,lawyers ,attack ,court premises ,capital city , Court, lawyers,campus,Delhi
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...