×

வடமாநிலங்களில் காற்று மாசு எதிரொலி: 15 ஆண்டாக ஓட்டிய அரசு வாகனத்துக்கு தடை...பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி

பாட்னா: தீபாவளிக்குப் பின்னர் டெல்லி, வடமாநிலங்களில் காற்றின் தரம்  மோசமடைந்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் வாழும் பொதுமக்கள் மூச்சு   திணறல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக   டெல்லி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரியானா மற்றும்   பஞ்சாபில் மேற்கொள்ளப்படும் விவசாய கழிவு எரிப்பு, காற்று மாசுபாட்டிற்கு  முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லி   அரசாங்கம் நேற்று முதல்  காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மாநிலத்தில்  ஒற்றை, இரட்டை இலக்க எண் வாகன திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், மாநிலத்தில் காற்றில் மாசு கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்  உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்  குறித்து, தலைமை செயலாளர் தீபக் குமார் கூறியதாவது:  பீகார் மாநிலத்தில் காற்று மாசுவினை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, 15 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட அரசு, வணிக வாகனங்களை தடை  விதிக்கப்படுகிறது. இந்த  நடவடிக்கை பாட்னா மற்றும் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் இன்று (நவ. 5) முதல் அமுல்படுத்தப்படும். அதாவது, இனி 15  ஆண்டு வயதுடைய வணிக மற்றும் அரசு வாகனங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும்.

இதற்காக போக்குவரத்துத்  துறை சார்பில், சிறப்பு இயக்கம் தொடங்கப்படும். அப்போது 15 ஆண்டுகள் வரை இயக்கப்பட்ட வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.  குறிப்பிட்ட 15 ஆண்டுக்கு மேல் தொடர்ந்து இயங்கும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே, 15  ஆண்டுகள் ஓடிய தனியார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மீண்டும்  மாசு கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்த  வேண்டியிருக்கும். புகையில் இருந்து மாசுபடுவதைக் குறைப்பதை வலியுறுத்தும் வகையில்,  வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு விவசாய  மானியம் அளிக்கப்படாது.  இவ்வாறு அவர்  கூறினார்.   


Tags : Nitish Kumar ,Bihar ,Northern Territories Northern Territories ,Chief Minister , Air pollution echoes in Northern Territories: Bihar Chief Minister's order
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை