அகஸ்தீஸ்வரம் அருகே சந்தையடியில் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்...கண்டு கொள்ளாத அதிகாரிகள் உறவினர் வீடுகளில் மக்கள் தஞ்சம்

தென்தாமரைகுளம்: அகஸ்தீஸ்வரம் அருகே கீழசந்தையடியில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு குமரியில் கனமழை பெய்தது. அப்போது இந்த ஊரில் உள்ள ரயில்வே கேட் அருகே பணிகள் நடந்த  இடத்தில் திடீர்   உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சுமார் 12க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் இந்த மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் நாசமாகின. இதையடுத்து வீடுகளில் இருந்து வெளியேறிய பொது மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

தற்போது வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் ஓரளவு வடிந்து விட்டதாக  தெரிகிறது. அதே வேளையில் குடியிருப்பு பகுதியை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சொந்த வீட்டுக்கு சென்று வருவதில் பிரச்னை தொடர்கிறது. ஆகவே உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, மீண்டும் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. மழை ஓய்ந்து 3 நாள் ஆகியும்  இன்று வரை இதே நிலை நீடிக்கிறது. தொடர்ந்து பொது மக்கள் அந்த பகுதியை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் நிலைமையை கூறி மழை நீரை வெளியேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த அதிகாரியோ இது என் வேலையல்ல என்று கூறி நழுவி கொண்டதாக தெரிகிறது. இதேபோல் இன்னும் சில அதிகாரிகளும் பொது மக்கள் பிரச்னையை கண்டு கொள்ளவில்லையாம். ஆகவே குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள  மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Agastheeswaram ,shelter ,relatives ,marketplace ,homes , Officers have sought shelter in relatives' homes in the marketplace near Agastheeswaram.
× RELATED எண்ணூர் குடியிருப்பு பகுதியில்...