×

மகள்கள் ஏமாற்றி எழுதி வாங்கிய சொத்தை மீட்டுத்தர வேண்டும்: மன்றாடுகிறார் மூதாட்டி

விழுப்புரம்: மகள்கள் ஏமாற்றி எழுதிவாங்கிய சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்துள்ளார். விழுப்புரம் வி.மருதூர் குப்புசாமி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரோஜினி(87). இவர் கலெக்டர் சுப்ரமணியனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கணவன் 1949ல் சுயமாக சம்பாதித்து வாங்கிய காலிமனையில் வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து நல்லநிலையில் உள்ளனர். மூத்த மகள் இறந்துவிட்டார். எனக்கு புற்றுநோய் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டேன்.

உடல்நிலையை கருத்தில்கொண்டு எனது கணவன் பெயரில் உள்ள சொத்தை எனது பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்துகொடுத்து, பிற்காலத்தில் மூன்று பிள்ளைகளுக்கு கொடுத்துவிடு என வாய்மொழியாக கூறினார். இதன்பிறகு என் கணவரும் 2008ம் வருடம் இறந்துவிட்டார். அவர் மறைவுக்கு பின் 3 பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்கும்படி கூறினார். பிள்ளைகளுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பதால் கணவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.

தனிமையில் இருப்பதை பயன்படுத்தி எனது மூத்த மகனின் மகள் சுமதி, என்னிடம் வந்து கடைசி வரை பார்த்துக்கொள்கிறேன், நானும் விதவை என்று கூறி, அப்பாவிற்கு சேரவேண்டிய சொத்திற்கான பங்கை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்ததும் தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். 2வது மகள் பத்மாவதியும் 2012ல் சுமதியை போலவே சொத்தில் மற்றொரு பங்கை ஏமாற்றி என்னை தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.

தன்னை ஏமாற்றி மோசடியாக எழுதிவாங்கிய சொத்தை சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரித்து எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நலச்சட்டத்தின்படி தானமாக எழுதிக்கொடுத்த  சொத்து பத்திரத்தை ரத்துசெய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு முழு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.இம்மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Daughters ,Muttatti , Daughters must cheat and restore property bought by: Muttatti pleads
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்