×
Saravana Stores

காங்கயம் அருகே நொய்யல் தடுப்பணை மதகு இயக்கும் கருவிகள் உடைந்தன...கரையோர மக்கள், விவசாயிகள் அச்சம்

வெள்ளக்கோவில்: நொய்யல் ஆற்றின் குறுக்கே காங்கயம் அருகே சின்னமுத்தூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மதகுகளை உயர்த்த உதவும் இயந்திர பாகங்கள் அனைத்தும் நேற்று உடைந்து போயின. இதனால் 9 மதகுகளை மூழ்கடித்தபடி நீர் நிரம்பி செல்வதால் கரையோர பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். கோவையில் உற்பத்தியாகி செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சின்னமுத்தூரில் 1992-இல் ரூ.13.51 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.
இங்கிருந்து திறக்கப்படும் நீர் கால்வாய் மூலம் கரூர் அரவக்குறிச்சியில் உள்ள கார்வழி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பயன்பெறும் வகையில் இத்தடுப்பணை  கட்டப்பட்டது.

 இந்நிலையில் திருப்பூர் சாயஆலைகளிலிருந்து வெளியேறிய சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது 2004க்கு பிறகு நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில்  வறட்சி ஏற்பட்டதால், மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பழைய கதவுகள் அகற்றப்பட்டு ரூ.7 கோடி ரூபாய் செலவில் புதிய கதவுகள் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளும்  மேற்கொள்ளப்பட்டது.

  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நொய்யலில் வந்த வெள்ள நீர் கார்வழி அணைக்கு திறந்துவிடப்பட்டது. மேலும் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையால் நொய்யலில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.இந்த தண்ணீரும்  கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கால்வாய் மூலம் கார்வழி அணைக்கு திருப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று மாலை கார்வழி அணை நிரம்பியதையடுத்து, நீர் திறப்பை நிறுத்தி விட்டு நொய்யல் ஆற்றிற்கு நீரை திருப்பி விட பொதுப்பணித்துறையினர் தடுப்பணையின் 9 மதகுகளையும் உயர்த்த முயற்சித்தனர்.

ஆனால் தரமில்லாத பொருட்களால் ஆன கருவிகளால் மதகுகளை உயர்த்த உதவும் பற்சக்கரங்களும் இயந்திர பாகங்களும் உடைந்து போனது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் 9 கதவுகளையும் மூழ்கடித்தபடி நிரம்பி  வழிந்தோடுகிறது.
இதனால் தடுப்பணைக்கு அருகில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள அஞ்சூர், துக்கச்சி உள்ளிட்ட வழியோர கிராமங்களில் உள்ள விவசாயிகள், அணையின் கதவுகள் உடைந்து விடுமோ என பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Noel ,Noel barricade ,Kangayam , Noel barricade near Kangayam: Religious equipment was broken ...
× RELATED காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்