‘‘காட்டு யானைகளை விரட்ட நூதன ஐடியா’’: தோட்டத்துக்கு மதுபாட்டில் வேலி

உடுமலை: அட்டகாசம் செய்துவரும் காட்டு யானைகளை விரட்ட தோட்டத்தில் காலி மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம் வல்லக்குண்டாபுரம் மலையடிவாரத்தில் ராவணாபுரம், ஆண்டியூர் மற்றும் பருத்தியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக 5 காட்டு யானைகள் உலா வருகின்றன. ஒரு  பெண் யானை மட்டும், கூட்டத்தில் இருந்து பிரிந்து, தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த யானையால் தென்னை, வாழை மற்றும் கரும்பு பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இந்த யானையை விரட்ட  வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் புளியம்பட்டி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்(28) என்பவர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க விவசாயிகள் புதிய  யுக்தியை கையாண்டு வருகின்றனர். தோட்டத்து வேலிகளில் காலி குவார்ட்டர் மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காற்றில் பாட்டில்கள் மோதும் சத்தத்தை கேட்டு பயந்து யானைகள் வராது என விவசாயிகள்  தெரிவித்தனர். இந்த புதிய யுக்தி ஓரளவிற்கு பலன் தரும் என வனத்துறையினரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், யானைகளை நிரந்தரமாக விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : New time Idea for driving wild elephants
× RELATED காட்டு யானைகள் அட்டகாசம் மளிகைக்கடையை சூறையாடியது