×

நிதின் கட்கரி பேச்சுவார்த்தைக்கு வந்தால் 2 மணிநேரத்தில் பிரச்சினை தீரும்: ஆர்எஸ்எஸ்க்கு சிவசேனா கடிதம்

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பாஜகவுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்குமாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் இந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் தனித்தனியாகப் பெரும்பான்மை இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலுக்குமுன் செய்த உடன்பாட்டின்படி ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிவசேனா பாஜகவிடம் தெரிவித்தது. ஆனால் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. 50;50 பங்கு தரமுடியாது என்று பாஜக சார்பில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது. பாஜக தவிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியானது. .

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி கூறியதாவது: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜகவில் உள்ள ஒரு சிலரால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளேன். 2 மணிநேரத்தில் பிரச்சினையை தீர்த்து வைத்து விடுவார். அவரால் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முடியும் என கிஷோர் திவாரி கூறினார்.

Tags : Nitin Gadkari ,talks ,Shiv Sena ,RSS , Nitin Gadkari, talks, 2 hours, problem solving, RSS, Shiv Sena, letter
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி