×

கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் மற்றும் தனியார் ஓட்டல் சார்பில் படகு சேவை நடத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் மற்றும் தனியார் ஓட்டல் சார்பில் படகு சேவை நடத்த தடை விதித்தும், போட் கிளப்பை மூடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கொடைக்கானல் ஏரியை ஒட்டியுள்ள 8 சென்ட் நிலம் போட் கிளப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் செப். 1-ல் முடிவடைந்தது. கொடைக்கானல் ஏரி கடந்த 2009-ம் ஆண்டில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் ஏரியை போட் கிளப் தான் முழுமையாக பயன்படுத்தி வருகிறது. ஏரியில் போட் கிளப் சார்பிலும், தனியார் ஓட்டல் நிறுவனம் சார்பில் படகு சேவை நடத்தப்படுகிறது. இதனால் கிடைக்கும் வருவாயை நகராட்சிக்கும், மீன்வளத்துறைக்கும் செலுத்துவதில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியை பயன்படுத்த தனியார் கிளப்பிற்கான குத்தகையை நீட்டிக்க தடை விதிக்க வேண்டும். ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வணிகரீதியாக யாரும் படகுகள் இயக்கக்கூடாது எனவும், ஏரியில் படகுகளை இயக்க பொது டெண்டர் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. கொடைக்கானல் நகராட்சி வக்கீல் முகம்மது முகைதீன் வாதிடுகையில், போட் கிளப்பிற்கான குத்தகை காலம் முடிந்து விட்டது என்றும் இதுவரை குத்தகை நீட்டிக்கப்படவில்லை என்றும் கூறினார். கொடைக்கானல் ஏரியில் நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறையினரின் படகு குழாம் மட்டுமே முறையானது மற்றவை முறையற்றவை என்றார். இதையடுத்து நீதிபதிகள் கொடைக்கானல் ஏரியில் போட் கிளப், தனியார் ஓட்டல் சார்பில் படகு சேவை நடத்த தடை விதித்தும், போட் கிளப்பை உடனடியாக மூடவும் உத்தரவிட்டனர்.

Tags : Kodaikanal lake ,boat clubs ,hotels , Kodaikanal Lake, Boat Club, Private Hotel, Boat Service, Prohibition, High Court, Order
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்