×

டெல்லியில் போலீஸார் திடீர் போராட்டம்: காவல்துறை ஆணையர் எச்சரிக்கை

டெல்லி: டெல்லியில் காவலர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். காயம்பட்ட வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கீழமை நீதிமன்றப் புறக்கணிப்பும் நடைபெற்றது.

இந்தநிலையில் டெல்லியில் காவலர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் திடீரென போரட்டத்தை தொடங்கினர்.

கையில் ‘காவலர்களை காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழுக்கங்களை எழுப்பினார்கள். போலீஸார் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்துக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Police outbreak ,Delhi ,Police commissioner , Delhi, police, agitation, police commissioner, alert
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது