×

வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும்: இன்று முதல் 7ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்... வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. அதனை தொடர்ந்து  கடந்த 27ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலட்ச தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது ‘மகா’ என்ற புதிய புயல் சின்னமாக மாறியது.

இதனால், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இரண்டு, மூன்று நாட்கள் மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக வெயில் அடித்து விளாசி வருகிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. தற்போது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும்; வடக்கு ஒடிசாவை நோக்கி புயல் நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 6,7 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Tags : Bay of Bengal , Director of the New Storm, Weather Center in the Bay of Bengal
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...