×

வடகிழக்கு பருவமழை தொடங்கியும் குட்டையாக காட்சியளிக்கும் சாத்தியாறு அணை

அலங்காநல்லூர்: வடகிழக்கு பருவமழை தொடங்கியும் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை நிரம்பாமல் இருப்பதால், பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர். மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சாத்தியார் அணை உள்ளது. பருவ மழை காலங்களில் வகுத்துமலை, மஞ்சமலை, செம்பூத்துமலை மற்றும் சிறுமலை பகுதியில் இருந்து சாத்தியார் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியும் சாத்தியார் அணைக்கு போதிய நீர்வரத்தில்லை. அவ்வப்போது அணைப்பகுதியில் பெய்து வரும் சாரல்மழையால் ஒரு அடி கூட நீர்மட்டம் உயரவில்லை.

இந்த அணை மூலம் கீழச்சின்னனம்பட்டி, எர்ரம்பட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட 10 கிராம கண்மாய்களில் நீர்நிரம்பி, பாசனத்திற்கு பயன்படும். அணை நிரம்பாததால் 2,500 ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால், பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து இடையபட்டி விவசாயி நடராஜன் கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், கண்மாய்கள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால்,  அலங்காநல்லூர், பாலமேடு பகுதியின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சாத்தியார் அணை தற்போது வரை நிரம்பாமல் உள்ளது. அணையின் உயரம் 29 அடி. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த அணையின் பாசனப்பகுதியில் மட்டும் பயறு மற்றும் மானாவாரியை பயிரிட்டுள்ளனர். குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடந்த 5 ஆண்டாக நிரம்பாத அணை இந்தாண்டாவது நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்’ என்றார்.

Tags : Satyagaram Dam , Dam of Satyam
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி