×

வைகையில் தண்ணீர் ஓடிய போதும் வறண்டு கிடக்கும் வண்டியூர் தெப்பக்குளம்

மதுரை: வைகையாற்றில் கரை தொட்டு தண்ணீர் ஓடியும் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப மாவட்ட, மாநகராட்சி, கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் தொடர் மழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் திறந்துவிட்டதால், மதுரை வைகையாற்றில் இருகரை தொட்டு தண்ணீர் ஓடியது. ஆற்றின் கீழ் பாலங்களும் தண்ணீரில் மூழ்கின. வைகையாற்றில் தண்ணீர் வந்தால், அதனை மோட்டார் மூலம் கொண்டு சென்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரப்பப்படுவது வழக்கம். பெருமளவு தண்ணீர் ஆற்றில் ஓடிய நிலையிலும், தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க மாநகராட்சி, மீனாட்சி கோயில் நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். மதுரை வண்டியூர் மாரியம்மன்  தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள, அகலத்தில் சதுரமாக அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் மேற்கே முக்தீஸ்வரர் கோயில், வடக்கே மாரியம்மன் கோயில் உள்ளது.  நாற்புறமும் 15 அடி உயர கல்லினாலான சுவரும், குளத்தின் உட்புறம் சுற்றிலும் 2 மீட்டர் அகலத்தில் நடைமேடை, மூன்று அடி உயரத்திற்குச்  சுற்றுச்சுவர் என குளத்தை கட்டியுள்ளனர்.

திருமலை மன்னர் மகால்  கட்டுவதற்காக மண் தோண்டிய இடமே பிறகு தெப்பக்குளமாக மாற்றப்பட்டது.  அப்போது குளத்தில் கண்டெடுக்கப்பட்ட  முக்குருணி விநாயகர் சிலை மீனாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. தெப்பத்தின் நடுவே நீராளி  மண்டபம். இதன் நான்கு மூலைகளிலும் சிறு விமானப்பகுதிகள், மைய மண்டபத்தின்  நடுவே உயர விமானம் என கலையழகு மிளிர்கிறது. நகரின் நுழைவு வாயிலில்  பண்பாட்டு ஆதாரமாக வீற்றிருக்கும் இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி ஆண்டின் அனைத்து நாட்களும் தண்ணீர்  இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்குளத்தில் தண்ணீரை எல்லா காலமும் தேக்கி வைத்தால், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே,  வைகையில் தண்ணீர் அதிகமாக வரும்போது, தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மதுரை மக்கள் கூறும்போது, ‘தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றிலிருந்து நேரடியாக  தண்ணீர் வரும் மதகுகள் இருந்தன. ஆறு பள்ளமாகி, குளம் மேடானதால் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இப்போது தெப்பத்திருவிழாவை குறிவைத்தே மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி படகுசவாரி நடத்தப்படுகிறது. பிந்தைய நாட்களில் குளம் வறண்டு கிடக்கிறது. மதுரை மக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குதூகலிக்கும் விதம் ஆண்டு முழுக்க இக்குளத்தில் தண்ணீர் நிரப்பி, படகுசவாரி நடத்தும் திட்டம் வேண்டும். மாநகராட்சி, சுற்றுலா, தொல்லியல் துறையினர், மாவட்ட மற்றும் மீனாட்சிகோயில் நிர்வாகங்கள் என அத்தனை பேரின் கரங்களும் ஒன்றிணைந்து இக்குளத்தை தண்ணீர் நிரம்பிய குளமாக மாற்றிக்காட்ட வேண்டும்’ என்றனர்.

Tags : Teapot pond ,Vaigai , Teapot pond
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு