இன்ஃபோசிஸ் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையிலான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை: நிறுவனத் தரப்பு விளக்கம்

பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன் ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையிலான எந்தவித ஆதாரமும் இல்லை என்று நிறுவனத்தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இன் ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் முறைகேடான கணக்குகள் மூலமாக லாபத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிறுவனத்துக்குள்ளிருந்தே அடையாளம் தெரியாதவர்களால் எழுப்பப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாயினர். ‘நேர்மையான ஊழியர்கள்’ என்ற பெயரில் வெளியான இந்த குற்றச்சாட்டுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளின்படி சந்தைக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரியப்படுத்தாமல் மறைத்ததாக நிறுவனத்தின் மீது பங்குச்சந்தை அமைப்புகள் விசாரணை நடவடிக்கையை எடுத்துள்ளன.

இதையடுத்து இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், என்எஸ்இ-க்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையிலான எந்தவித ஆதாரமும் இதுவரை நிறுவனத்துக்குக் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

>