×

தொடரும் வடகிழக்கு பருவமழை: ரூ. 10 லட்சம் வாழைகள் சேதம்

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதில், அதிகபட்சமாக சூலூர் பகுதியில் 62 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை விமான நிலையத்தில் 52.4 மி.மீ., ஆழியாரில் 12.4 மி.மீ., பொள்ளாச்சியில் 7 மி.மீ., கோவை தெற்கில் 32 மி.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 3 மி.மீ., வேளாண் பல்கலைக்கழக பகுதியில் 20 மி.மீ. என மொத்தம் 188.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

சூலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக கண்ணம்பாளையம் மல்லிங்கன் குட்டை பகுதியில் உள்ள மாரப்பகவுண்டர், பழனிசாமி ஆகியோரது தோட்டங்கள் மற்றும் சரவணந் தோட்டம் போன்ற பகுதிகளில் பயிரப்பட்டிருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் அடியோடு சாய்ந்தன. இது குறித்து தகவல் அறிந்த சூலூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் தளபதி முருகேசன் மற்றும் நகர செயலாளர் சண்முகம்ஆகியோர் பாதிப்படைந்தவர்களின் தோட்டங்களுக்கு நேரில் சென்று சேத விபரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.   பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், அறுவடை செய்யவிருந்த வாழைகள் வேறுடன் சாய்ந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக விரிவான அறிக்கையினை பெற்று மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றனர்.நேற்று முன்தினம் பெய்த மழையின்போது பலத்த இடி மின்னலும் காணப்பட்டது.

இடி மின்னலால் சூலூர் காவல் நிலைய கம்ப்யூட்டர் மற்றும் ஒயர்லெஸ் போன்ற மின்சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக நேற்று அதிகாலை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. அதேபோல் நேற்று இரவு 10 மணிக்கு மேல் கோவையில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. குறிப்பாக குறிச்சிக்குளம், சுந்தராபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ேமலும் காலை நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மலுமிச்சம்பட்டி, போடிபாளையம், எல்அன்டி பைபாஸ் சாலையகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனியின் தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர்.  இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Northeast Monsoon
× RELATED ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...