×

காரைக்காலில் கடும் போக்குவரத்து நெரிசல்: முடங்கி கிடக்கும் மேற்கு புறவழிச்சாலை

காரைக்கால்: காரைக்காலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை பணி முடங்கி கிடக்கிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆன்மிக பூமியான காரைக்கால், டெல்டா மாவட்டங்களில் உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி அன்னை பேராலயம், காரைக்கால் சனிபகவான், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்லும் மைய பகுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, என்ஐடி, ஜிப்மர், அரசு வேளாண் கல்லூரி உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்களும், மார்க் துறைமுகம், ஓஎன்ஜிசி மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளன. இத்தனை பெருமைக்குஉரிய காரைக்காலில் சாலை வசதி மேம்படுத்தப்படாமல் உள்ளது.

காரைக்கால் நண்டலாறு எல்லையிலிருந்து வாஞ்சூர் செல்லும் 22 கி.மீ. சாலை, காரைக்கால் நகரிலிருந்து அம்பகரத்தூர் செல்லும் 15 கி.மீ. சாலை, காரைக்காலிலிருந்து நெடுங்காடு செல்லும் 12 கி.மீ. சாலை ஆகியவை காரைக்காலின் பிரதான சாலைகள் ஆகும். இதில், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சீர்காழி, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஊர்களுக்கும் காரைக்கால் வழியாகதான் செல்ல வேண்டும். ஆனால், இந்த 3 சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகளாக உள்ளது. காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரையிலான 15 கி.மீ. சாலையில் அண்மையில் திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான 10 கி.மீ. சாலை மட்டுமே முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சாலைகளும் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதனால், ஆங்காங்கே பல் இளித்தவண்ணம்  சாலைகள் உள்ளது.

காரைக்காலை பொறுத்தவரை மேற்கண்ட முக்கிய சாலைகள் மாநில அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக, பல ஆண்டுகளாக மாவட்ட பொதுப்பணித்துறை நிதி கோரவில்லை. இதனால் சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதுதவிர, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் செய்ய வேண்டிய நகர்ப்புற சாலைகள், குடியிருப்பு சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் படுமோசமாக உள்ளது. இதனால் சாதாரண வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை மேற்கண்ட சாலைகளையே பயன்படுத்துவதால், அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், காரைக்காலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேறு புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியதன் பேரில், கடந்த என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 2014-15ம் ஆண்டு நிதியாண்டு ரூ.76 கோடி மதிப்பீட்டில் மேற்கு புறவழிச்சாலை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, காரைக்கால் எல்லையான நண்டலாறு பகுதியிலிருந்து வாஞ்சூர் எல்லை வரை செல்லும் சாலையான பாரதியார் சாலையில் தலத்தெரு கீழகாசாகுடி முதல் திருநள்ளாறு சாலையில் உள்ள வாஞ்சியாறு பாலம் வரை ரூ.21 கோடியில் 3.20 கி.மீ. சாலையை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, முற்றிலும் வயல்வெளி பகுதிகளில் ஏராளமான மணல் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு சிறு சிறு பாலம், தடுப்புசுவர், ஜல்லிகள் கொட்டி சமன் செய்யும் வரை நடைபெற்ற வேலை, தார் போடும் நிலையில் கடந்த ஓராண்டாக முடங்கி போனது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 2014-15 நிதியாண்டில், அப்போதைய நிதி நிலையில் தார் சாலை போடும் ரேட் குறிக்கப்பட்டதாகவும், தற்போதைய விலைவாசி உயர்வால் அந்த நிதி போதுமானதாக இல்லை. எனவே, இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப நிதியை மாற்றி கொடுத்தால் தார் சாலை போடலாம் என ஒப்பந்ததாரர் அடம் பிடிக்கின்றனர். டெண்டரில் குறிப்பிட்ட நிதியை மாற்ற முடியாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு போட்டு வேலையை வாங்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஓராண்டில் அமைக்க வேண்டிய சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றனர். முதல் கட்ட பணி முடிந்தால்தான், வாஞ்சியாறு பாலம் முதல் திருமலைராஜனாறு பாலம் வரையிலான 5.5 கி.மீ. மேற்கு புறவழிச்சாலை ரூ.55 கோடியில் தொடங்க முடியும். எனவே, டெண்டர் போடப்பட்ட நிலையில் என்ன விதிகள் வகுக்கப்பட்டதோ அதே விதியின் கீழ் தார் சாலை போடும் வேலையையும் விரைவாக முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Karaikal , Bypass
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...