×

செட்டித்தாங்கல் ஊராட்சி வள்ளலார் நகரில் கட்டப்பட்ட நியாயவிலை கடை குடிமன்னர்களின் கூடாரமாக மாறிய அவலம்

ராணிப்பேட்டை: செட்டித்தாங்கல் ஊராட்சி வள்ளலார் நகரில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை குடிமன்னர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் ராணிப்பேடை நகரத்தை ஒட்டி உள்ள தண்டலம், வள்ளலார் நகரில் உள்ள 10, 11, 12 ஆகிய 3 வார்டுகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த 3 வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தரப்பில் அப்போது ₹8 லட்சம் திரட்டப்பட்டு 5 சென்ட் நிலம் வாங்கி, அந்த இடத்தில் 3 வார்டுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டது. இந்த கடை கடந்த 4 ஆண்டுகளாக திறக்கப்படாததால் தற்போது குடிமன்னர்களின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த நியாய விலை கடை வளாகத்தில் குடிமன்னர்கள் தினமும் மதுபாட்டில்களை கொண்டு வந்து குடித்துவிட்டு கும்மாளம் போட்டும், பாட்டில்களை உடைத்தபடியும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பேப்பர்கள் என தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தினமும் முகம் சுளித்தபடியும் குடிமன்னர்களுக்கு பயந்த படியும்தான் செல்கின்றனர். தற்போது 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நவல்பூரில் உள்ள நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்கி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த அவலநிலையை போக்க புதிய நியாய விலைக்கடையை உடனடியாக திறக்கவேண்டும். என 3 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shop ,citizens ,Chettithangal Panchayat Vallalar ,ration shop , ration shop
× RELATED லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி