×

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து : சிறையில் அசாஞ்சேயைச் சந்தித்த ஐ.நா. நிபுணர் எச்சரிக்கை

லண்டன்: சித்ரவதைத் தண்டனைகள் குறித்த ஐ.நா. கண்காணிப்புப் பதிவாளரான நீல்ஸ் மெல்சர், விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். இது தொடர்பாக மெல்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்ரவதை, கொலை மற்றும் பரவலான அமெரிக்க மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவில் 19 வழக்குகள் அசாஞ்சே மீது தொடர்ந்துள்ளனர். ஆனால் இந்த மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் தொடர்ந்து சட்டப்பாதுகாப்புடன் உலா வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

ஜாமீனை மீறியதாக அசாஞ்சே தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அமெரிக்காவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று அசாஞ்சே தொடுத்த வழக்கிலும் தோற்றார். இந்நிலையில் சிறையில் அசாஞ்சேயைச் சந்தித்த மெல்சர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு இப்போது அசாஞ்சே உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனரீதியான நீண்ட கால சித்ரவதைக்கு ஆளான ஒருவருக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் அசாஞ்சேவிடம் தென்படுவதாக கூறியுள்ளார். அசாஞ்சேயின் உடல், மன நிலை பற்றிய எச்சரிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு இது வரை செவிசாய்க்கவில்லை. அசாஞ்சேயின் உரிமைகள், நேர்மை தொடர்பாக பிரிட்டன் சுத்தமாக அசட்டையுடன் இருப்பதோடு இழிவாகவும் பார்க்கிறது.

பன்னாட்டுச் சட்டங்களின்படி அவருக்கு வழங்க வேண்டிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அவர் தன் சட்டப்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அவருக்கு மறுக்கப்பட்டு வருகின்றன. அவர் தன் வழக்கறிஞரைச் சந்திப்பதற்கும் ஆவணங்களைப் பார்ப்பதற்கும் அங்கு தடை இருந்து வருகிறது. நான் சிறையில் அவரைச் சந்தித்த பிறகு அனுப்பிய அறிக்கை மற்றும் பரிந்துரைகளை பிரிட்டன் அரசு நிராகரிப்பு செய்தது. அதாவது என்னுடைய பரிந்துரைகள் நான் அங்கு கண்ட விஷயங்கள் என்று அனைத்தையுமே பிரிட்டன் புறக்கணித்தது.

அவர் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு கடும் கண்காணிப்புக்குள்ளாகி வருகிறார். ஆனால் அவர் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளாரோ அதில் இந்த மாதிரி அடக்குமுறையெல்லாம் சட்டப்படி அடங்காது. ஆகவே என்னைப் பொறுத்தவரை அசாஞ்சே குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதல்ல இங்கு பிரச்சினை, மாறாக அரசுக்கு எதிரான விஷயங்களை, அரசின் துர்நடத்தைகளை அம்பலப்படுத்தினாய் அல்லவா எனவே அதற்கான விலையைக் கொடு என்பது போலவே தெரிகிறது. எனவே பிரிட்டன் தங்கள் செயல்பாட்டினை அசாஞ்சேயைப் பொறுத்தவரை மாற்றிக் கொள்ளவில்லையெனில், மனிதாபிமானமற்ற நிலையை மாற்றிக் கொள்ளவில்லையெனில் அசாஞ்சே உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதுதான் எனது எச்சரிக்கை என நீல்ஸ் மெல்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Julian Assange ,WikiLeaks ,Expert , WikiLeaks Founder, Julian Assange, Life, Danger, Prison, UN Expert, alert
× RELATED சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!!