×

20 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் அவலம்: நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சங்கராபுரம் பேருந்து நிலையம்

சங்கராபுரம்: 20 வருடங்களை கடந்தும் சங்கராபுரம் பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்தாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள்ளது சங்கராபுரம் தாலுகா. கள்ளக்குறிச்சி  தாலுகாவில் இணைந்திருந்த சங்கராபுரம் பகுதி கடந்த 1993ம் ஆண்டு  சங்கராபுரம் தாலுகாவாக பிரிக்கப்பட்டது. இதில் சங்கராபுரம் ஒன்றியம் மற்றும்  ரிஷிவந்தியம் ஒன்றியம், கல்வராயன்மலை ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். அதிக  கிராமங்களை கொண்ட இந்த பகுதி முழுக்க  முழுக்க விளைநிலங்களை  கொண்டதாகும். கல்வராயன்மலையில் உள்ள  தரிசுக்காடு, இன்னாடு, சேராப்பட்டு, வஞ்சிக்குழி, வாழைக்குழி, மான்கொம்பு, தேக்கம்பட்டு  மற்றும் சங்கராபுரம் தாலுகாவின் எல்லைப்பகுதியாக உள்ள மூங்கில்துறைப்பட்டு  உட்பட 300க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதாகும். இந்த கிராமங்களில் உள்ள  பொது மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் சங்கராபுரம் வருவதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இதைத்தவிர கிராமப்புறங்களில் இருந்து கிராம  பொதுமக்கள் வெளி நகரங்களுக்கு செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள்  சங்கராபுரம் வந்து  செல்வதுண்டு.

இந்நிலையில் சங்கராபுரம் பேருந்து நிலையம்  ஒரு குறுகிய கால் வட்ட நிலவு போன்று சிறிய இடமாக உள்ளது. இந்த பேருந்து  நிலையத்தில் ஒரே நேரத்தில் பத்து பேருந்துகள் நிற்க இடம் கிடையாது. இதில்  நடைபாதை ஆக்கிரமிப்பு மற்றும் பேருந்து நிலையம் ஆட்டோ நிலையமாக வேற மாறி உள்ளது. சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சென்னை  மற்றும் பெங்களூரில் இருந்து வரும் பேருந்துகள் சங்கராபுரம் பேருந்து  நிலையத்தில் இடவசதி இல்லாததால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சில  நேரங்களில் வருவது கிடையாது. இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்  பயணிகளுக்கு ஏமாற்றம் அடைவதே வழக்கமாக இருந்து வருகிறது. சங்கராபுரம்  தாலுகாவாக பிரிக்கப்பட்டு 20வருடங்களாகியும் இதுவரை பேருந்து நிலையம்  விரிவாக்கத்திற்கு யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு  9மணிக்கு மேல் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவது கிடையாது  என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும். இங்கு காவல்நிலையம், சார் பதிவாளர்  அலுவலகம், சார்நிலைக்கருவூலம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்வேறு அரசு  மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இயங்கி வருகின்ற சங்கராபுரத்தில் பேருந்து  நிலையம் விரிவுபடுத்தப்படாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

இந்த பேருந்து நிலையத்தில்  சைக்கிள் ஸ்டேண்ட் கிடையாது என்பது  குறிப்பிடத்தக்கது. மோட்டார் பைக்கில் வரும் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே  வண்டியை நிறுத்துவிட்டு செல்வதால் பேருந்துகளுக்கு இடவசதி இன்றி  தவித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடமாக சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியாக  உள்ளது. எனவே சங்கராபுரம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக  உள்ள சங்கராபுரம் பேருந்து நிலையத்தை இடம் மாற்றமோ அல்லது விரிவாக்கமோ   செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கராபுரம் தாலுகா பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Sankarapuram Bus Stand ,Crisis Sankarapuram Bus Stand , Sankarapuram Bus Stand
× RELATED திருவள்ளூர் - கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை