×

உரம் கடும் தட்டுப்பாடு எதிரொலி: யூரியா வாங்க காத்துக்கிடந்த விவசாயிகள்

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் புதூர் யூனியன் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மக்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மக்காச்சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், பாசிப்பயிறு உள்ளிட்டவை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், எட்டயபுரம், பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி, சிங்கிலிபட்டி, கல்குமி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து புதூர் யூனியன் பகுதி விளைநிலங்களில் நெட்டை மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம் உள்ளிட்டவை விதைப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் அடி உரம் போடப்பட்டு பயிர்கள் வளர்ச்சியின் முதல் நிலையில் உள்ளன. தொடர்ந்து பயிர்கள் வளர யூரியா உரம் போட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் நிலவும் கடும் உரத்தட்டுப்பாட்டால் தனியார் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் மிகக் குறைவான அளவே யூரியா உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனியார் கடைக்கு யூரியா உரம் வருவதை அறிந்த பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வரிசையில் காத்து கிடந்து போதிய யூரியா உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு யூரியா உர மூட்டைகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி புதூர் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். உடனடியாக யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனிடையே நேற்று புதூர் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்திற்கு சுமார் 400 மூட்டை யூரியா உரம் கொண்டு வரப்பட்டது. தகவலறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், புதூர் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் வரிசையில் காத்துக் கிடந்தனர். 400 மூட்டைகள் மட்டுமே வந்திருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விவசாயிக்கு ஒன்று என்ற கணக்கில் மூட்டை வழங்கப்பட்டது. இதன் காரணமாக நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கிடந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து மதிமுக புதூர் ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன் கூறுகையில், எங்கள் யூனியனில் ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம், கம்பு, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் பயிரிடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளா போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்தாண்டு தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாய பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் அரசின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் யூரியா உரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். புதூர் யூனியன் பகுதிக்கு மட்டுமே சுமார் 2 ஆயிரம் மூட்டை யூரியா தேவை என்ற நிலையில், தற்போது வெறும் 400 யூரியா மூடைகளை மட்டுமே அரசு வழங்கியுள்ளது, என்றார்.

Tags : Fertilizer shortage
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...