சர்வதேச, தேசிய போட்டிக்கான தேர்வில் குளறுபடி: டென்னிஸ் சங்கம் மீது வீரர்கள் குற்றச்சாட்டு

சேலம்: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வில் குளறுபடி உள்ளதாக, தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கம் மீது வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், சேலம் மற்றும் கோவையை சேர்ந்த சாப்ட் டென்னிஸ் வீரர்கள் மோனீஷ், ஞானபிரபு, ஸ்டீபன் ராஜ் ஆகியோர் தங்களது பெற்றோருடன் வந்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். இதுவரை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் செயல்பாடு முறையாக இல்லை. குறிப்பாக, சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் அரசியல் மற்றும் சங்க நிர்வாகிகளின் தலையீடு உள்ளது‌. இதனால், திறமையான வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுதவிர, அணி தேர்வு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகள் குறித்து எந்தவித தகவலும் கூற மறுத்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு வேண்டியர்கள் மட்டும் தேர்வாகி விளையாட வேண்டும் என நினைக்கின்றனர்.

சங்கத்தின் குறுக்கீடு காரணமாக, தமிழ்நாடு அணிக்காக விளையாட வேண்டிய ஞானபிரபு என்பவர், மணிப்பூர் சென்று அந்த அணிக்காக விளையாடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் கூட தேசிய அளவிலான போட்டிக்கு ஸ்டீபன்ராஜ் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் எந்த காரணமும் கூறாமல் அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் நடந்துவரும் தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்றனர். இதுகுறித்து சாப்ட் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “வீரர்கள் தேர்வில் எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வீரர் கேட்டுக்கொண்டதால்தான், அணியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது பயிற்சியாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இதுபோன்று நடந்து வருகின்றனர்,” என்றனர்.

Related Stories:

>