×

மானாமதுரை அருகே கிராமத்திற்குள் புலி புகுந்ததாக பரபரப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே கிராமத்திற்குள் புலி புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். புலி சிக்காததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சியில் உள்ளது பீசர்பட்டினம் கிராமம். இங்கு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் கீழமேல்குடி கூட்டுக்குடிநீர் திட்ட மோட்டார் அறை உள்ளது. இங்கு பணியாற்றும் வீரகல்யாணி(50), நேற்று காலை 8.30 மணியளவில் மோட்டார் போட சென்றார். அப்போது ஆற்றுப்பகுதியிலிருந்து புலி ஒன்று வெளியேறி, அருகில் இருந்த சுப்பையா என்பவரது தோப்பிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த வீரகல்யாணி அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்து ஓடி வந்து கிராம மக்கள் மற்றும் தோப்பின் உரிமையாளர் சுப்பையாவிற்கு தகவல் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன், எஸ்ஐ மாரிக்கண்ணன், மாவட்ட வன அலுவலர் ரமேஸ்வரன், தீயணைப்புத்துறை அலுவலர் நாகராஜன் மற்றும் கிராமமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். புலி புகுந்ததாக கூறப்பட்ட தோப்பு பகுதிக்குள் பட்டாசுகளை கொளுத்தி போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கடைசிவரை புலி தென்படவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பீதியில் உள்ளனர்.

வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், ‘‘மானாமதுரையை ஒட்டி அடர்ந்த காடுகள் ஏதும் கிடையாது. கண்மாய்களில் கருவேலமர காடு மட்டுமே உள்ளது. இதில் மான், மரநாய் உள்ளிட்ட விலங்குகள் மட்டுமே உள்ளன. புலி இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் பார்த்தவர் உறுதியாக சொல்வதால் ஊழியர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்டை நாய், வெடிகள் உள்ளிட்டவை பயன்படுத்தி தேடுதல் பணி நடக்கிறது’’ என்றனர்.

Tags : Manamadurai ,village ,Tiger , Tiger
× RELATED மானாமதுரை வந்த வைகை தண்ணீர்