×

அணை திறந்தும் ஏரியில் நீர் நிரம்பாததால் விவசாயிகள் ஏரியில் கஞ்சி காய்ச்சி குடித்து குடியேறும் நூதன போராட்டம்

செங்கம்: செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியேரியில் அணை திறந்தும் பொது பணித்துறையின் அலட்சியத்தால் நீர் நிரம்பாததை கண்டித்து விவசாயிகள் ஏரியில் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தில் உள்ளது பெரியேரி. இந்த ஏரியில் 35 ஆண்டுகளாக நீர் நிரம்பி கோடி போகவில்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பநத்தம் அணையில் இருந்து ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும் ஏரி நிரம்பவில்லை.

இதனை கண்டிக்கும் விதமாக பொது பணித்துறையின் அலட்சி போக்கை கண்டித்து நேற்று கரியமங்கம், அம்மனுர், முறையாறு, பேயலாம்பட்டு, ஒத்தபனைமரம் உட்பட 30 கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரியமங்கலம் ஏரியில் பந்தல் அமைத்து கஞ்சி காய்ச்சி குடித்து ஏரியில் குடியேறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொது பணித்துறை உதவி பொறியாளர் ராஜராம் மற்றும் அலுவலர்கள் அங்கு வந்து விவசாயிகளிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்த ஏரியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நீர் நிரம்பாமல் உள்ளது. மேலும், 45க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயிர் வைத்து விளைச்சல் செய்ய முடியாமல் அண்டை மாநிலங்களுக்கு விவசாய கூலி வேலைகளுக்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, செங்கம் பகுதியில் உள்ள ஆற்றில்  இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், ஆற்றில் பெரும் பள்ளம் ஏற்பட்டு குப்பநத்தம் அணை திறந்தும் செங்கம் பகுதியில் உள்ள சில ஏரிகளில் நீர் நிரம்பாமல் உள்ளது. எனவே, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயர் அதிகாரிகள் அல்லது கலெக்டர் நேரில் வந்து ஏரியில் நீர் நிரம்பிட உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

இதையடுத்து, உதவி பொறியாளர் ராஜராம் கூறியதாவது: செங்கம் தாலுகாவில் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் 47 ஏரிகள் உள்ளது. தற்போது, குப்பநத்தம் ஏரியில் கடந்த 18ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் 4 ஏரிகளில் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. மற்ற ஏரிகளில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே நிரம்பி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆற்றில் பல அடி பள்ளம் தோண்டி பெரும் அளவில் மணல், கொள்ளை அடிக்கப்பட்டதால் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலன ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு விவசாய அமைப்புகள், ஏரி பாசன விவசாய சங்க பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : lake , Struggle
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு