×

கங்கை - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம்: 25 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்: அண்ணா பல்கலை. முன்னாள் பேராசிரியர் கதிர்.விசுவலிங்கம் தகவல்

சென்னை: கங்கை - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வறண்ட பகுதிகளாக உள்ள 30 மில்லியன் ஏக்கரில் 25 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் உணவு உற்பத்தி 20 சதவீதம் அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் கதிர் விசுவலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,1982-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகளாக தேசிய நீர்வள மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்ட பல நதிநீர் இணைப்புத் திட்ட அறிக்கைகளை பல்வேறு நிபுணர் குழுக்கள் தொடர்ந்து ஆதரித்தும், நிராகரித்தும் வந்துள்ளன. 2002-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை 2012-ல் முடித்துவைத்த உச்ச நீதிமன்றம், இந்திய நதிகளை இணைக்கும் திட்டங்களை பரிசீலிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது.

அதன்படி, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சிறப்புக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 2015-ம் ஆண்டு ஏப்ரலில் நதிகள் இணைப்பைச் செயல்படுத்த பணிக்குழுவை மத்திய நீர்வளத்துறை நியமித்தது. இந்தியாவின் கனவு திட்டம் இதன் முன்னோட்டமாக கிருஷ்ணா - கோதாவரி நதிகளுக்கு இடையே முதல் நீர் இணைப்புக் கால்வாய் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. தற்போது 31 நதிகள் இணைப்புத் திட்ட ஆய்வறிக்கைகள் தேசிய முன்னோக்குத் திட்டத்தின் கீழ் தயாராக உள்ளன.

இந்திய நதிகள் இணைப்புத் திட்டங்களை இந்தியாவின் கனவுத் திட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிட்டன. சுமார் 2,640 கி.மீ. நீளம் கொண்ட கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் உட்பட 60 நதிகளை இணைக்கும் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் கே.எல்.ராவ் அறிக்கையின்படி கங்கை - காவிரி திட்டத்தை நிறைவேற்ற ரூ.2.5 லட்சம் கோடி செலவாகும் என கூறப்படுகிறது.

இந்த நதிகள் இணைப்பால் பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயன்பெறும். விவசாய பூமி இந்திய பரப்பளவில் சுமார் 58 சதவீதம் விவசாய பூமியாக உள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகள் மலைகள், காடுகள், நீர்நிலைகள், குடியிருப்புகள், தரிசு நிலங்கள், பாலைவனமாக உள்ளன என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வறண்ட பகுதிகளாக உள்ள 30 மில்லியன் ஏக்கரில் 25 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மற்றும் இதன்மூலம் நாட்டின் உணவு உற்பத்தி 20 சதவீதம் அதிகரிக்கக் கூடும். கங்கை, நர்மதா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளால் ஏற்படும் வெள்ளச் சேதங்களை தடுக்கலாம்.

மேலும் 10 ஆயிரம் மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்ய முடியும். 10-க்கும் குறையாத பெரிய கால்வாய்கள், 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதோடு வனவிலங்கு சரணாலயங்களுக்கு போதிய நீர்வசதியும் கிடைக்கும். இணைப்புச் சாலைகள், நீர்வழிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா தலங்களையும் உருவாக்கலாம் என கதிர்.விசுவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags : Anna University , Ganga - Cauvery, Rivers, Connectivity Project, 25 Million Acres, Irrigation Facility, Anna University, Former Professor, Radiology
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!