×

கர்நாடகாவைச் சேர்ந்த தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு?: எடியூரப்பா ஆடியோ பேச்சு குறித்தும் இன்று விசாரணை

பெங்களூரு: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்வர் எடியூரப்பாவின் சர்ச்சை பேச்சு குறித்த ஆடியோ விவகாரம் குறித்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்ததுடன், அவர்கள் வரும் 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அம்மனு மீது நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய்ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணாமூராரே ஆகியோர் அமர்வு முன் கடந்த மாதம் விசாரணை நடந்தது.

பதவி பறிக்கப்பட்ட 17 பேரின் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல்ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, சச்சின் பூவையா, வி.கிரி உள்ளிட்டோர் ஆஜராகி வாதம் செய்தனர்.  வக்கீல்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து தீபாவளி விடுமுறைக்கு பின் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் கூறி வழக்கை கடந்த அக்டோபர் 25ம் தேதி ஒத்தி வைத்தனர்.  இவ்வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், கடந்த வாரம் ஹுப்பள்ளியில் நடந்த பாஜ தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடியூப்பா பேசியதாக வீடியோ சிடி ஒன்று வெளியாகியது. அதில், ‘‘பதவி இழந்துள்ள 17 பேரின் தியாகத்தால் தான் பாஜ ஆட்சி அமைந்துள்ளது. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும். பாஜ தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் ஆலோசனையின் பேரில் தான் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 17 பேர் ராஜினாமா செய்தனர். மும்பையில் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஏற்பட்ட செலவை கூட அமித்ஷாதான் ஏற்றுக் கொண்டார்’’ என்பது உள்பட பல விஷயங்களை எடியூரப்பா பேசி இருப்பதாக வீடியோவில் வெளியாகி உள்ளது.

முதல்வர் எடியூரப்பா பேசியதை அஸ்திரமாக கையில் எடுத்துள்ள காங்கிரஸ், 17 எம்எல்ஏக்களை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பாஜ இழுத்துள்ளதை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவரான பிரகாஷ் ரதோட் டெல்லி சென்று எடியூரப்பா பேசியதாக கூறப்படும் வீடியோ சிடியை மூத்த வக்கீல் கபில்சிபலிடம் கொடுத்தார். அதை பலமுறை கேட்ட கபில்சிபல், பதவி இழந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாவதற்கு முன், அவ்வழக்கு விசாரணை நடந்த அமர்வு முன் சிடியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை உச்ச நீதிமன்றம் கூடியதும் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் வழக்கில், அவர்கள் ஆபரேஷன் தாமரை திட்டத்தில் பாஜவுக்கு இழுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆதாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும். அவசியம் ஏற்படும்பட்சத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வக்கீல் கபில் சிபலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புகிறோம். அவர் ஒப்புதல் வழங்கினால் இன்று விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடத்தி இடைக்கால தீர்ப்பு வழங்கும்படி நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச்சிற்கு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து வீடியோ சிடி தொடர்பாக நவம்பர் 5ம் தேதியான இன்று விசாரணை நடத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.  இதனிடையே பதவி இழந்துள்ள 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பும் இன்று வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழங்குவது தொடர்பாக மனுதாரர்களின் வக்கீல்களுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், தீர்ப்பு வரும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Tags : Supreme Court ,removal ,Karnataka Karnataka MLAs ,Yeddyurappa , Karnataka, disqualified MLA, Supreme Court, Yeddyurappa
× RELATED ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பதவி நீக்க...