×

உயிருக்கு அச்சுறுத்தல் எதிரொலி கேரள முதல்வர் பினராய்க்கு பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள், அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.    கேரள மாநிலம் அட்டப்பாடு வனபகுதியில் கடந்த வாரம் தமிழகத்தை சேர்ந்த  மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களது  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினர். இதையடுத்து உடல்களை  அடக்கம் செய்யக்கூடாது என பாலக்காடு நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து 4 பேரின் உடல்களும் பாலக்காடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில்  வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆதரவு  தெரிவித்ததாக கூறி கடந்த 3 தினங்களுக்கு முன் கோழிக்கோட்டில் வைத்து  அலன்சுகைப் (19), தாஹாபஷல் (24) என்ற இரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது  செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர்கள் மீது தீவிரவாத  தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள்  கைது செய்யப்பட்டதற்கு கேரளாவில் அனைத்து அரசியல் கட்சியினரும் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதை  தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக  உளவுத்துறை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முதல்வர்  பினராய் விஜயனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில்  வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதை கண்டித்து  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. போலீசையும், கேரள அரசையும் கண்டித்தும்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து  சென்று அந்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர்.

Tags : Pinarayi Security ,Kerala , Kerala Chief Minister Pinarayi, security increase
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...