×

ஈரோடு கைத்தறி உதவி இயக்குநர் ஆபிசில் ரெய்டு: கணக்கில் வராத 18.5 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஈரோடு பவானி ரோடு அசோகபுரத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குநராக ஸ்ரீதரன் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் இங்கு பணியில் சேர்ந்த இவர், சென்னையில் இன்று நடக்கும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலையிலேயே சென்று விட்டார். இந்த அலுவலகத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல் அனுப்பி வைப்பது, உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கான கூலி வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்ள தனி அலுவலர்கள் உள்ளிட்ட கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இட மாறுதல் உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது.

இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு இங்குதான் கூலி வழங்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட சதவிகிதம், உதவி இயக்குநர் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கருணாகரன் மற்றும் போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.  ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. இதேபோல், ஈரோடு வீரப்பன்சத்திரம், சூளையில் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர்  சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 18.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக அலுவலக ஊழியர்கள் 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Tags : Office Raid ,Assistant Director , Erode ,Administration Assistant Director, Raid
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்