×

குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: அதிகாலையில் குளிர் வாட்டுகிறது

ஊட்டி: நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. நீலகிரி  மாவட்டத்தில் அக்டோபர் இறுதி வாரம் முதல் சில தினங்கள் நீர்ப்பனி விழும். தொடர்ந்து, நவம்பர் முதல் உறைபனி ஆரம்பிக்கும்.  ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே நீர்ப்பனி துவங்கியுள்ளது. கடந்த சில  நாட்களாகவே நீர் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. கடந்த  வாரங்களில் மழை இருந்ததால், பனியின் தாக்கம் குறைந்த போதிலும்,  கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் பனியின் தாக்கம் சற்று அதிகமாக  காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின்  தாக்கம் கடுமையாக உள்ளது. சில பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில்  அதிகம் இருந்த போதிலும், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் உள்ளதால்,  குளிர் வாட்டியெடுக்கிறது. மேலும், ஓரிரு நாட்களில் உறைபனி விழும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக மழை குறைந்து தேயிலை  மற்றும் மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கடந்த  மூன்று மாதங்களாக பெய்த மழையால் தற்போது மாவட்டம் முழுவதும் தேயிலை மற்றும்  மலை காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது, பனியின் தாக்கம்  அதிகமுள்ளதால், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளில் நோய்  தாக்குவதுமட்டுமின்றி, கருகும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள்  கவலையடைந்துள்ளனர். மேலும், இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள்  மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேற்று  ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச  வெப்பநிலை 8 டிகிரி செல்சியசுமாக இருந்தது. இதனால், அதிகாலை நேரங்களில்  பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி  தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.  பெரும்பாலானவர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.  குளிர் அதிகரித்துள்ளதால், ஸ்வெட்டர், சால்வை விற்பனை  கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.


Tags : Ooty , Minimum temperature, fed, cold
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்