×

திருவள்ளுவர் உருவம் உருவான வரலாறு

சென்னை: வள்ளுவர் உருவம் உருவானது எப்படி என்பது குறித்து வரலாற்று ஆவணங்களில் கூறியிருப்பதாவது: குறள் நெறி தந்த ஞானன் திருவள்ளுவருக்கு முதலில் உருவம் தந்தவர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. இன்றும் அந்த உருவம்தான் திருவள்ளுவர் என்றால் இவர்தான் என்ற ஓர் உருவகத்திற்குள் நுழைய வைத்தது.  சர்மா தனது 12வது வயதிலிருந்தே வள்ளுவருக்கு உருவம் கொடுக்க முயன்றார். ஆனால், முயற்சிகள் திருப்தியாக அமையவில்லை. இருந்தாலும் இதுதான் தனது லட்சியம் என்று தொடர்ந்து முயன்று வந்தார். பின் நாட்களில் பாவேந்தர் பாரதிதாசனின் நட்பு சர்மாவுக்கு கிடைக்கிறது. அவர் சில அமைப்புகளை அவரிடம் சொல்லி ‘உங்களால் முடியும் வரையுங்கள்’’ என்று உற்சாகம் ஊட்டினார். அதன்படிதான் சர்மா திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தார்.

எந்த மத அடையாளங்களும் இல்லாமல், வெள்ளை உடையில் உருவானதுதான் வள்ளுவரின் இந்த உருவம். பாவேந்தர், அண்ணா ஆகியோர் சர்மாவை தழுவி வரவேற்றார். சர்மாவின் வீட்டுக்கு அண்ணா நேரில் சென்று அந்த புகைப்படத்தைப் பார்த்து, அவரை பாராட்டினார். 1964ல் அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன்தான் முதன் முதலாகச் சென்னை சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் படத்தை திறந்து வைத்தார். திருவள்ளுவரின் உருவப் படத்தைத் தனது 58வது வயதில் திருப்தியுடன் நிறைவு செய்த பிறகுதான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கே.ஆர். வேணுகோபால் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tiruvalluvar , History ,Tiruvalluvar
× RELATED ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி