×

திருவள்ளூவர் சிலை அவமதிப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்: குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

சென்னை: திருவள்ளூவர் சிலை அவமதிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர்): தஞ்சாவூர்  மாவட்டம் பிள்ளையார்ப்பட்டியில் உள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர்  சிலைக்கு அவமரியாதை செய்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. திருவள்ளுவரை  விவாத பொருளாக மாற்றுவதும், கேலிக்குறியதாகவும், அவமானப்படுத்தக் கூடிய  வகையிலும் நடத்துவதும், தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழன் கூட, தமிழன் மட்டுமல்ல  தமிழ் மீது பற்று கொண்ட யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  தமிழனாக பிறக்காதவன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். தற்போது நடந்திருக்கக்  கூடிய செயல் திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நான்  கருதுகின்றேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்தவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள். இதற்கு காரணமானவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! வைகோ (மதிமுக பொது செயலாளர்): திருவள்ளுவர் சிலை மீது சாணத்தைக் கொட்டி இருக்கின்றார்கள். இச்செய்தி கேட்ட நொடியில், இருதயத்தில் சூட்டுக்கோல் நுழைத்தது போன்று, உடலும் உள்ளமும் பதறுகின்றது. நஞ்சினும் கொடிய செயலைச் செய்த பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. தீச்செயலைச் செய்தவர்கள் மனித சமூகத்தில் நடமாடத் தகுதி அற்றவர்கள். இக்கொடியோர் செயலால் தமிழகம் வெட்கித் தலைகுனிகின்றது. மன்னிக்க முடியாத இம்மாபாதகச் செயலைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்): திருவள்ளுர் சிலையை இழிவுபடுத்தும் வகையில் சில தீய சக்திகள் செயல்பட்டுள்ளன. இந்த அநாகரீகமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். திருவள்ளுவர் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் பெருமைக்குரியவர் ஆவார். இவருக்கு மதவேஷம் பூசுவது அல்லது சிலையை இழிவுபடுத்துவது போன்ற காரியங்களை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.  திருமாவளவன்(விசிக தலைவர்): பெரியார், அம்பேத்கர் சிலையை அவமதித்த பிற்போக்கு சக்திகள் இப்போது ஐயன் திருவள்ளுவன் சிலையையும் அவமதிக்கும் அநாகரீகத்தை அரங்கேற்றுவது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக தமிழர்கள் அனைவருமே வெட்கப்பட வேண்டும். சிலையை அவமதித்தது யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.  

முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): திருவள்ளுவருக்கு எதிரான தாக்குதல் தொடர்வது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது. அவர்தம் திருக்குறளும் கடவுள், சாதி, மதம், அரசியல் கடந்த பொதுமறையாகும். வள்ளுவரை எந்த ஒரு தனிமனிதனும் அல்லது அமைப்பும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறளை வழங்கிய வள்ளுவர்க்கு காவி உடை அணிவித்து தமிழக பாஜவினர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில், கம்பீரமாக காட்சியளித்த திருவள்ளுவர் சிலையின் முகத்தில் சாணத்தை வீசி, கறுப்புச் சாயம் பூசி மிருக கூட்டம் இழிவுபடுத்தியுள்ளது. இழிவு நிறைந்த இச்செயல்புரிந்த கொடியவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்): தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலகப் பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளை படைத்த திருவள்ளுவர், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். தமிழ், தமிழினம் என்ற எல்லைகளை கடந்து அவர் போற்றப்படுகிறார். வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் இத்தகைய அவமதிப்பு நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டியவை. முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): திருவள்ளுவர் சிலையை சில சமூக விரோதிகள் அவமரியாதை செய்துள்ளனர். சமூக விரோதிகளின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அதோடு இந்த செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமி  (புதுவை முதலமைச்சர்) :  திருவள்ளுவரை மக்கள் தெய்வமாகவே பார்க்கின்றனர். திருக்குறள் காலத்தால் அழியாதது. பிரதமர் மோடி, தாய்லாந்து நாட்டுக்கு சென்றிருந்தபோது அங்கு திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் அரசியல் சாயம் பூசுவது, திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு கொச்சைத்தனமான அரசியலாகும்.


Tags : party ,Thiruvalluvar ,leaders , Political party , Thiruvalluvar , punishment
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...