×

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்: அம்பத்தூர் மண்டலத்தில் அவலம்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுர் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளதால், நோய் பாதிப்பில் மக்கள் தவித்து வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட வடக்கு கொரட்டூர், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், ஞானமூர்த்தி நகர், மண்ணூர்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்,  பெய்த தொடர் மழையால் மேற்கண்ட பகுதிகளில் வீடுகளைச்சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனுடன் தற்போது கழிவுநீரும் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து இப்பகுதி மக்கள் மலேரியா, மர்ம காய்ச்சல்  டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மேற்கண்ட பகுதிகளில் வடிகால் வசதிகள் முறையாக இல்லாததால், மழைநீர் வெளியேற முடியவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர்  சூழ்ந்து நிற்கிறது.

குறிப்பாக, அம்பத்தூர் பகுதிகளான ஞானமூர்த்தி நகர், ஞானமூர்த்தி நகர் விரிவாக்கம், கள்ளிகுப்பம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், கொரட்டூர் பகுதிகளான கோபாலகிருஷ்ணன் நகர், ராம் நகர், திருமலை நகர், ஒய்.எஸ்.ஆர் நகர்,  அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. தற்போது, இதில் கழிவுநீரும் கலந்துள்ளது. மேலும், வீடுகளை சுற்றி தேங்கும் நீர்  பல இடங்களில் பாசி படிந்து துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து, அம்பத்தூர் மண்டல அதிகாரிகளிடம்  பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே, நோய் பரவுவதை தடுக்க அம்பத்தூர் மண்டல பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.

Tags : areas ,zone ,Ambattur ,area , Sewage , residential , People suffering , disease
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...