×

ஆதார் சிறப்பு மையங்களை அதிகரிக்க திட்டம்: அஞ்சல் துறை அதிகாரி தகவல்

சென்னை: அஞ்சல் துறை வாயிலாக அனைவருக்கும் ஆதார் சேவை கிடைக்கும் வகையில் ஆதார் சிறப்பு மையங்களை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1,435 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் உள்ளது. சென்னையில் 70 தபால் நிலையங்களில் ஆதார் சேவை அளிக்கப்படுகிறது. புதிய ஆதார் கார்டுகள் பதிவு, திருத்தம் உள்ளிட்ட சேவைகள் இந்த மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பொதுமக்களின் வசதிக்காக தற்போது செயல்படும் சேவை மையங்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தபால் நிலையங்களில் உள்ள ஆதார் மையங்களில் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் எடுக்க வேண்டும் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு தேடி வரும் நிலை நிலவி வருகிறது. இதை கருத்தில்கொண்டும், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அமைந்திருக்கும் இடத்தில், மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதார் சிறப்பு மையங்களை அமைத்து வருகிறோம்.

இதனால், பொதுமக்களுக்கு சிரமம் குறைகிறது. தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் 1 லட்சம் பேர் புதியதாக ஆதார் சேவையை பெற்றுள்ளனர். 5 லட்சம் பேர் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே, மேற்கொண்டு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆதார் மையங்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மாதம்தோறும் 30 சிறப்பு மையங்கள் வரையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதை 50 வரை அதிகரிக்க உள்ளோம். குறிப்பிட்ட இடங்களை தவிர வேறு எங்கெல்லாம் சிறப்பு மையங்களை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மையங்களை அதிகரிப்பதன் மூலம் அனைவருக்கும் ஆதார் சேவை மிக எளிதாக கிடைக்கும்.  இவ்வாறு கூறினார்.


Tags : centers ,Postal Department , Plan , increase ,Aadhaar ,Postal , information
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...