×

தொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் லாட்ஜில் தற்கொலை செய்ததை மறைக்க சடலத்தை சாலையில் வீசிய ஊழியர்கள்: பரபரப்பு தகவல்

பல்லாவரம்: பல்லாவரத்தில் கடந்த 2ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் லாட்ஜில் தங்கி இருந்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும், போலீசார் விசாரணையில் இருந்து தப்பிக்க லாட்ஜ் ஊழியர்கள், அவரது சடலத்தை சாலையில் வீசிச்சென்றதும் தெரியவந்துள்ளது. பல்லாவரம் வெட்டர்லைன் ராணுவ மைதானம் அருகே சாலை ஓரத்தில் கடந்த 2ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி ஒருவரது சடலம் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன் (45) என்பது தெரியவந்தது.  மேலும், இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன், அனகாபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இவரது அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால், சந்தேகடைந்த லாட்ஜ் ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு ஆனந்தன் இறந்து கிடப்பது தெரிந்தது.  

இது வெளியில் தெரிந்தால், போலீஸ் விசாரணைக்கு நேரில் அலைய வேண்டி வரும். மேலும், தங்களது விடுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய விடுதி ஊழியர்கள், நள்ளிரவில் அவரது சடலத்தை ஆட்டோவில் எடுத்து வந்து பல்லாவரம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையோரம் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விடுதி ஊழியர்கள் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : lodge ,suicide , worker, death,suicide , corpses ,sensational ,information
× RELATED நாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனை...