×

ஜல்லிக்கட்டு பிரச்னைபோல் சபரிமலை பிரச்னையில் செயல்பட முடியாது: கேரள முதல்வர் சட்டசபையில் பேச்சு

திருவனந்தபுரம்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை உத்தரவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை போல சபரிமலை விவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியாது என்று கேரள முதல்வர் கூறினார்.கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து அந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கேரள சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.அதற்கு முதல்வர் பினராய் விஜயன் பதிலளித்து கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பும் ஒன்றல்ல. சபரிமலை விவகாரம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பானதாகும். நமது நட்டில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.

 இதில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. எனவேதான் சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் மாநில அரசால் தலையிட முடியாது. மத்திய அரசும் அதை உறுதிபடுத்தியுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தை போல சபரிமலை விஷயத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியாது. ஆனால் சில கட்சிகள் மத நம்பிக்கையின் பெயரில மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சபரிமலையில் இளம்பெண்கள் செல்லவேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடாகும். ஆனால் வலுக்கட்டாயமாக இளம்பெண்கள அரசு ெகாண்டு செல்லாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் கட்டுப்பட அரசு தயாராக உள்ளது. சபரிமலைக்கு செல்வதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்குதான் உள்ளது. கடந்த ஆண்டை போலவே சபரிமலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : assembly ,Kerala CM ,Sabarimalai , Jallikattu ,Sabarimala, Kerala CM,Assembly
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...